

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதன் பேரில், பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே கடந்த 11-ம் தேதி கோல்கத்தா வந்தார்.
நேற்று நேதாஜி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்ற ‘ஜாம்பவானின் இந்திய பயணம்’ என்ற நிகழ்ச்சியில் பீலே பங்கேற்றார். இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோல்கத்தா அணி சக உரிமையாளர் கங்குலி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "எனக்கு விளையாட்டுலக நிகழ்வுகள் குறித்து எதுவும் தெரியாது. சச்சின், கபில்தேவ் ஆகிய இரண்டு பேரை மட்டுமே தெரியும். பீலே யார் என்பதே தெரியாமல்தான் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்துக்கு இசையமைத்தேன். ஆனால் திரைப்படத்தை பார்த்த போது மூன்று முறை எனக்கு அழுகை வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பீலேவுடனான சந்திப்பு குறித்து ஏர்.ஆர்.ரஹ்மான் இன்று நிருபர்களிடம் கூறும்போது, ''பீலே கால்பந்து விளையாட்டில் பெரிய ஜாம்பவான். அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்துக்கு நான் இசையமைத்ததை கவுரவமாக கருதுகிறேன். அவரை நேரில் சந்தித்ததிலும் பெருமை அடைகிறேன். இதன் மூலம் அவரை சந்திக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகி உள்ளது. பீலே படம் மிகவும் சுவாரஸ்யமாகவும் பிரேசில் நாட்டின் உணர்வை பிரதிபலிப்பதாகவும் இருக்கும். பீலேவின் செல்வாக்கை கூறும் இந்த படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்"என்றார்.