

பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியின் முதல் இரு போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பிப்ரவரி மாதம் முதல் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. பிப்ரவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்ஏசி மைதானத்தில் தொடங்குகிறது.
இதில் இந்திய அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கையில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ஜோனாதன் பேர்ஸ்டோ, சாம் கரன், மார்க் உட் ஆகிோயர் இந்தியாவுக்கு எதிரான முதலிரு டெஸ்ட் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படவில்லை. அதேசமயம், காயத்திலிருந்து குணமடைந்து ஒலே போப் தேறியுள்ளார். உடல்தகுதித் தேர்வில் தேறினால் அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு போப் சேர்க்கப்படுவார். சோமர்செட் வீரர் கிரேக் ஓவர்டன் இலங்கை தொடருக்குப்பின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக மிகவலிமையான அணியைத் தயார் செய்து டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி விவரம்:
ஜோய் ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஜேம்ஸ் ஆன்டர்ஸன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஓலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.