Last Updated : 21 Jan, 2021 01:52 PM

 

Published : 21 Jan 2021 01:52 PM
Last Updated : 21 Jan 2021 01:52 PM

‘வெட்கப்படுகிறேன்; என் கணிப்பை தவறாக்கிவிட்டது இந்திய அணி’: மைக்கேல் வான் ஒப்புதல்


இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 4-0 என டெஸ்ட் தொடரை இழக்கும் என தவறாகக் கணித்துவிட்டேன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது தவறான கணிப்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

அடியெல்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவி்ன் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்குச் சுருண்டு மோசமானதோல்வி அடைந்தது.
இந்த அணியின் மோசமான பேட்டிங்கைப் பார்த்த சர்வதே அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் இந்திய அணி தொடரை மோசமாக இழக்கப்போகிறது என்று விமர்சித்தனர்.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இழக்கப்போகிறது” எனக் கணித்திருந்தார்.

ஆனால், மைக்கோல் வான் கணிப்பு மட்டுமல்ல, பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கணிப்பை எல்லாம் மாற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்திய அணியில் முக்கிய வீரர்களான கேப்டன் கோலி, பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, கே.எல்.ராகுல், ஹனுமா விஹாரி, அஸ்வின் உள்ளிட்டோர் இல்லாத நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இளம் இந்திய அணி வெற்றி பெற்றது. 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்த காபா மைதானத்தில் ஆஸி அணியை மண்ணைக் கவ்வ வைத்தது இந்திய அணி.

இந்திய அணியின் ஆகச்சிறந்த வெற்றியைப் பார்த்தபின், தனது கணிப்பை மாற்றிக் கொண்டு மைக்கேல் வான் ஒப்புதல் அளித்துள்ளார். லண்டனில் வெளிவரும் "தி டெய்லி டெலிகிராப்" நாளேட்டில் மைக்கேல் வான் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

அடியெல்ட் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தபின் இந்திய அணியை பற்றி தவறாகக் கணித்தேன். இந்திய அணியை அதிகமாக விரும்பும் ரசிகர்கள் கூட இந்திய அணி மீண்டுவருவார்கள் என நம்பவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியஅணி வென்று என் கணிப்பை தவறாக்கிவிட்டது இந்திய அணி. இப்போது நான் வெட்கப்படுகிறேன்.

ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் போன்றோரிடம் இருந்து சிறந்த பங்களிப்பு காணப்பட்டது. நான் கணித்தது தவறு எனச் சொல்வதில் தயக்கம் இல்லை.

ஆஸ்திரேலியாவிடம் ஏதோ தவறு இருக்கிறது என்பதையும் சொல்லவேண்டும். ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் இருவரும் பேட்டிங்கில் மென்மையான போக்கைக் கையாண்டர்களேத் தவிர ஆக்ரோஷமான ஆட்டம்இல்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு எதிராக கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையவில்லை. குறிப்பாக நாதன் லேயானின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

டிம் பெய்ன் கேப்டன்ஷிப் எந்தவிதத்திலும் ஆஸி. அணிக்கு உதவவில்லை. பலநேரங்களில் ஆட்டத்தை வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து தவறவிட்டுள்ளார். இது கடந்த காலங்களில் இதுபோன்று செய்வதை பெய்ன் பழக்கமாக வைத்துள்ளார்.

போட்டியில் எளிதாக வெல்வதற்கு வழிநடத்துவதைவிட, போட்டியை எவ்வாறு கடினமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதை கேப்டன் தீர்மானிக்க வேண்டும். ஆனால், பெய்ன் விசித்திரமாக நடந்து கொள்கிறார்
இவ்வாறு மைக்கேல் வான் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x