Last Updated : 20 Jan, 2021 02:49 PM

 

Published : 20 Jan 2021 02:49 PM
Last Updated : 20 Jan 2021 02:49 PM

‘டாடிஸ் ஆர்மி’ பெயரை மாற்றுங்கள்; வயதான வீரர்களைக் கழற்றிவிடுங்கள்: சிஎஸ்கே அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை

சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி: கோப்புப் படம்.

புதுடெல்லி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் டாடிஸ் ஆர்மி எனும் பெயரை மாற்றுவதற்கு 14-வது ஐபிஎல் தொடர் சிறந்த வாய்ப்பு. வயதான வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை அணியில் கொண்டுவரத் தகுந்த நேரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 13-வது ஐபிஎல் தொடரில் 7-வது இடத்தையே பிடித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறியது.

ஐபிஎல் அணியில் இடம் பெற்றிருந்த ஷேன் வாட்ஸன் கிரிக்கெட்டிலிருந்தே விடைபெற்றுவிட்டார். இந்த சீசனில் விளையாடமல் இருந்த ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா இருவரும் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. சிஎஸ்கே அணியிலிருந்து விலகிவிட்டதாக ஹர்பஜன் சிங் இன்று அறிவித்துள்ளார். ரெய்னா நிலைமை தெரியவில்லை.

2021-ம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என மகேந்திர சிங் தோனி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு அவரால் விளையாட முடியும் என்பதும் சந்தேகம்தான். ஒரு வீரரைத் தேர்வு செய்தால் 3 ஆண்டுகள் விளையாட வேண்டும். ஆதலால், தோனிக்கு ரூ.15 கோடி கொடுத்து வீணாக்காதீர்கள்.

ஒருவேளை தோனி 2021-ம் ஆண்டு மட்டும் விளையாடிவிட்டு, அதன்பின் விலகிவிட்டால் சிஎஸ்கே அணிக்கு ரூ.15 கோடி திரும்பக் கிடைக்கும். ஆனால், அதே ரூ.15 கோடிக்குத் தகுதியான வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். மெகா ஏலத்தில் கிடைத்த வாய்ப்பு என்னவென்றால், அணி நிர்வாகத்திடம் பணம் இருந்தால், பெரிய அணியை உருவாக்க முடியும்.

ஆதலால் தோனியை ஏலத்தில் விடுவித்துவிட்டு, மேட்ச் கார்டு முலம் மீண்டும் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அதுதான் அணிக்கும், நிர்வாகத்துக்கும் நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

“சிஎஸ்கே அணிக்கு சாம்பியனாக இருந்தாலும், டாடிஸ் ஆர்மி எனும் பெயர் தொடர்ந்து வருகிறது. வயதான வீரர்களே அதிகமாக அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களைச் சார்ந்தே அணி விளையாடி வருகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வயதான வீரர்களைக் கழற்றிவிட்டு, இளம் வீரர்களை அணியில் அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிஎஸ்கே அணிக்கு இருக்கும் டாடிஸ் ஆர்மி எனும் பெயரை மாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு மேட்ச் வின்னர்களாக ஜொலித்த அம்பதி ராயுடு, தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்கவைக்க வேண்டும். மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆதலால், சிஎஸ்கே நிர்வாகம் தங்களின் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஆர்சிபி அணி, புதிய பயிற்சியாளர் மைக் ஹெசன் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங், சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்திலும் சம பலம் கொண்டதாக ஆர்சிபி இருக்கிறது. ஆர்சிபி அணி வலிமையானது என மைக் ஹெசன் கடந்த ஆண்டு நிரூபித்தார்.

சில வீரர்களை ஆர்சிபி அணி விடுவிக்கும் எனத் தெரிகிறது. இதில் பர்தீவ் படேல் தானாகவே வெளியேறிவிட்டார். உமேஷ் யாதவ், ஷிவம் துபே, மொயின் அலி ஆகியோரை விடுவிக்க வேண்டும்''.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x