Last Updated : 19 Oct, 2015 09:02 AM

 

Published : 19 Oct 2015 09:02 AM
Last Updated : 19 Oct 2015 09:02 AM

3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், டேவிட் மில்லரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் அடித்து ஆடினர். ஒரு பக்கம் டி காக்கும் மறுபக்கம் மில்லரும் பவுண்டரிகளாக விளாச, 8.1 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது தென் ஆப்பிரிக்கா.

மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்துக்கொண்டிருந்த இந்த ஜோடியைப் பிரிக்க, சுழற்பந்து வீச்சாளர்களிடம் தோனி பந்தைக் கொடுத்தார். இது பலன் தந்தது. ஸ்கோர் 72-ஆக இருந்தபோது ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து மில்லர் அவுட் ஆனார். இவர் 41 பந்துகளில் 33 ரன்களைக் குவித்தார். மில்லரைத் தொடர்ந்து அமித் மிஸ்ராவின் பந்துவீச்சில் ஹசிம் ஆம்லாவும் (5 ரன்கள்) அவுட் ஆக தென் ஆப்பிரிக்காவின் வேகம் சற்று குறைந்தது. 10 முதல் 15-வது ஓவர் வரை அந்த அணியால் 16 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இருப்பினும் டி காக்குடன் 3-வது விக்கெட்டுக்கு டூ பிளெஸ்ஸி ஜோடி சேர ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அசுர வேகத்திலும் ஆடிய இந்த ஜோடி ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. பல பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தென் ஆப்பி ரிக்காவின் வேகத்தைப் பார்க்கும்போது அந்த அணி மிக எளிதில் 300 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 39-வது ஓவரில் மோகித் சர்மாவின் பந்துவீச்சில் புவனேஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து டூ பிளெஸ்ஸி (60 ரன்கள்) ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து டி காக் ரன் அவுட் ஆனார். டி காக் 118 பந்துகளில் 103 ரன்க ளைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 11 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். டி காக்கைத் தொடர்ந்து ஏ.பி.டிவில்லியர்ஸ் (4 ரன்கள்) ஆகியோர் அவுட் ஆக 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் என்று தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இறுதிக் கட்டத்தில் பெஹார்டியன் (33 ரன்கள்) மட்டும் ஓரளவு பொறுப்பாக ஆட தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 271 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலை யில் ஆடவந்த இந்திய அணி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே சொதப்பிவரும் ஷிகர் தவன், மோர்கலின் பந்தில் டிவில்லியர் ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் 29 பந்துகளில் 13 ரன்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இவர்கள் அதிக பதட்டமில்லாமல் ஸ்கோரை உயர்த்தினர். இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரோஹித் சர்மா, தன் வழக்கமான பாணியில் அடித்து ஆடி அரைசதம் எடுத்தார். ஆனால் 65 ரன்களை எடுத்திருந்த நிலையில் டுமினியின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 113-ஆக இருந்தது.

ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து கோலியுடன் தோனி ஜோடி சேந்தார். கடந்த சில நாட்களாக குறைந்த ரன்களில் அவுட் ஆகிவந்த கோலி, இம்முறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக ஆடினார். 64 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த பிறகும் பழைய வேகத்தில் அவர் அடித்து ஆடவில்லை, கேப்டன் தோனியும் மிதமான வேகத்தில் ஆட, இந்திய அணி விக்கெட்டை இழக்காவிட்டாலும் ரன் அடிக்கும் வேகம் குறைந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 பந்துகளில் 78 ரன்களை அடிக்கவேண்டும் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இந்த நேரத்தில் அடித்து ஆட முயன்ற தோனி (47 ரன்கள்) மோர்கலின் பந்தில் ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனியைத் தொடர்ந்து விராட் கோலி (77 ரன்கள்), ரெய்னா (0), ரஹானே (4 ரன்கள்) ஆகியோர் அட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x