Last Updated : 19 Jan, 2021 02:20 PM

 

Published : 19 Jan 2021 02:20 PM
Last Updated : 19 Jan 2021 02:20 PM

டெஸ்ட் தொடரை 2-வது முறையாக வென்றது இந்திய அணி; கில், புஜாரா, பந்த் அபாரம்: 32 ஆண்டுகளுக்குப் பின் பிரிஸ்பேனில் ஆஸி.யை வீழ்த்தி வரலாற்று வெற்றி

டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியல் கோப்பையுடன் இந்திய அணி: படம் உதவி | ட்விட்டர்.

பிரிஸ்பேன்

ரிஷப் பந்த், ஷுப்மான் கில் ஆகியோரின் ஆகச்சிறந்த பேட்டிங்கால் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

328 ரன்கள் இலக்கைத் துரத்திச் சென்ற இந்திய அணி, 97 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பந்த் 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

ஆட்ட நாயகன் விருது ரிஷப் பந்த்துக்கும், தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 430 புள்ளிகளுடன் 71.7 சதவீத வெற்றியுடன் முதலிடத்தை இந்தியா பிடித்தது. ஆஸி. அணி 3-வது இடத்துக்குச் சரிந்தது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றபோது, ஆஸி. அணியில் ஸ்மித், வார்னர் இல்லாத பலவீனமான ஆஸி. அணியை இந்தியா வென்றது என விமர்சிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை இந்தியாவில் முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ஸ்மித், வார்னர் இருக்கும் வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வென்று சாதித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 369 ரன்களும், இந்திய அணி 326 ரன்களும் சேர்த்தன.

2-வது இன்னிங்ஸில் ஆஸி. அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்து 328 ரன்கள் இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. 98 ஓவர்களில் 328 ரன்கள் இலக்கை அடைய வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்கிய இந்திய அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, பார்டர்-கவாஸ்கர் டிராபியைத் தொடர்ந்து 2-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கோலி இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்ட ரஹானே தலைமையில் இந்திய அணி வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதுவரை ரஹானே தலைமை ஏற்று 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடையவில்லை என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துள்ளது. தோனிக்கு அடுத்து வெற்றிகரமான கேப்டனாக டெஸ்ட் போட்டியில் ரஹானே தொடர்ந்து வருகிறார்.

பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் இதுவரை அதிகபட்சமாக 236 ரன்களை சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாகும். கடந்த 1951-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி சேஸிங் செய்து ஆஸி. அணியை வென்றதுதான் வரலாறு. அதன்பின் எந்த அணியும் இங்கு 4-வது இன்னிங்ஸில் சேஸிங் செய்து ஆஸ்திரேலியாவை வென்றதில்லை.

இந்த முறையை 69 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 328 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பின் காபா மைதானத்தில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியைச் சந்தித்ததில்லை. ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாகவே காபா இருந்துவந்தது. ஆனால், எதிரியின் கோட்டைக்குள் சென்று அவர்களை வீழ்த்துவது என்பது சாதாரணமானது அல்ல. அதை கனகச்சிதமாகச் செய்து ஆஸ்திரேலிய அணிக்கு வரலாற்றுத் தலைக்குனிவை இந்திய அணி கொடுத்துள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 20 விக்கெட்டுகளையும் இழந்ததில்லை. கடைசியாக 1988-ல் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் காபா மைதானத்தில் இழந்தது. அதன்பின் 32 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவிடம் 20 விக்கெட்டுகளையும் ஆஸி. அணி இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி இல்லை. முக்கிய வீரர்களான பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், இசாந்த் சர்மா, கே.எல்.ராகுல், விஹாரி போன்ற வீரர்கள் காயத்தால் ஆடாத நிலையில், இளம் வீரர்கள் சேர்ந்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.

கடைசி நாளான இன்று 324 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரோஹித் சர்மா 7 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த புஜாரா, கில்லுடன் சேர்ந்தார். இருவரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை சமாளித்து ஆடினர். அதிலும் புஜாராவை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் பாடிலைன் பந்துவீச்சைக் கையாண்டும், உடலில் பல அடிகளைத் தாங்கிக்கொண்டும் புஜாரா சுவராக நின்று பேட் செய்தார். மறுபுறம் கில் தனக்கே உரிய ஷாட்களை ஆடி அசத்தினார். ஸ்டார்க் ஓவரில் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி வியக்க வைத்தார்.

உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் சேர்த்திருந்தது.
சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் அரை சதம் அடித்து 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ரஹானே 27 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா, ரிஷப் பந்த் கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் சேர்ந்து 61 ரன்கள் சேர்த்தனர். நிதானமாக ஆடிய புஜாரா அரை சதம் அடித்து 56 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதிலும் ரிஷப் பந்த் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நாதன் லேயான் பந்துவீச்சை ரிஷப் பந்த் வெளுத்து வாங்கினார். மயங்க் அகர்வால் வந்த வேகத்தில் 9 ரன்களில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார்.

முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி இந்த முறையும் சில அற்புதமான ஷாட்களை ஆடினார். அதிலும் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான கம்மின்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி சுந்தர் அசத்தினார். 24 ரன்களில் சுந்தர் ஆட்டமிழந்தார்.

மனம் தளராமல் ஆடிய ரிஷப் பந்த், ஸ்வீப் ஷாட்கள், கட் ஷாட்கள், டிரைவ் ஷாட்களை ஆடி அனைவரையும் அசத்தினார். தாக்கூர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

97 ஓவர்களில் இந்திய அணி 329 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. அணி தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், லேயான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x