Last Updated : 19 Jan, 2021 06:49 AM

 

Published : 19 Jan 2021 06:49 AM
Last Updated : 19 Jan 2021 06:49 AM

விளையாட்டாய் சில கதைகள்: சைக்கிள் பந்தயத்தின் கதை

கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளுக்கு உலகக் கோப்பை எப்படியோ, அப்படித்தான் சைக்கிள் பந்தயத்தில் ‘டூர் டி பிரான்ஸ்’ விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகச்சிறந்த சைக்கிள் பந்தய வீரர் யார் என்பதை இந்தப் பந்தயம்தான் தீர்மானிக்கிறது. அந்த அளவுக்கு சைக்கிள் பந்த யங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் ‘டூர் டி பிரான்ஸ்’-ஐ தொடங்கப்போவதாக 1903-ம் ஆண்டு முறைப்படி அறிவித்த நாள் இன்று (ஜனவரி 19).

பிரான்ஸ் நாட்டில் விளையாட்டுத் துறையில், கடந்த நூற்றாண்டில் பிரபலமாக இருந்த 2 பத்திரிகைகளுக்கு இடையில் இருந்த போட்டிதான் இந்த சைக்கிள் போட்டி தொடங்க முக்கிய காரணம். இதில் ‘லீ வெலோ’ என்ற நாளிதழ், 80 ஆயிரம் பிரதிகளை விற்று மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. அதற்கு போட்டியாக இருந்த ‘எல் ஆட்டோ’ பத்திரிகையால் அத்தனை பிரதிகளை எட்ட முடியவில்லை. இந்த சூழலில் தங்கள் விற்பனையை பெருக்க என்ன செய்யலாம் என்று ‘எல் ஆட்டோ’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிரியர் குழுவில் இருந்த ஜியோ லெஃபெர் என்பவர், “நமது பத்திரிகையின் சார்பாக மிக நீண்ட சைக்கிள் போட்டி ஒன்றைத் தொடங்கினால் மக்களிடையே கவனத்தைப் பெறலாம்” என்று கூறியுள்ளார். இதை மற்றவர்களும் ஏற்க, ‘டூ டி பிரான்ஸ்’ சைக்கிள் போட்டியை நடத்துவதாக 1903-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி மே மாதம் 31-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக ‘டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டது. 2,428 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சைக்கிள் பந்தயத்தில் மொத்தம் 60 வீரர்கள் பங்கேற்றனர். ஆனால் போட்டியின் பாதியிலேயே பலர் வெளியேற 21 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர். மவுரிஸ் காரின் என்பவர் இந்த முதல் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x