

நாளை உலகக் கோப்பைக் கால்பந்துத் திருவிழா தொடங்குகிறது. முதல் போட்டியில் பிரேசில் தனது முத்திரையைப் பதிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரேசிலை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார் குரேஷிய வீரர் மோட்ரிக்.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளில் மிகப்பெரிய அணியான ரியால் மேட்ரிடில் முத்திரைப் பதித்தவர் குரேஷிய வீரர் லுகா மோட்ரிக்.
பிரேசில் அணியை அவர்கள் மண்ணில், பிரேசில் ரசிகர்களின் தீவிரத்துடன் சேர்த்து எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதை மோட்ரிக் ஒப்புக் கொண்டாலும், "நாங்கள் எங்கள் தரங்களை வெளிப்படுத்தி பிரேசிலை வீழ்த்த முடியும், ஆனாலும் இது கடினமே" என்கிறார்.
அனைத்துப் போட்டிகளும் நடுக்களத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நடுக்களத்தில் கறாராகச் செயல்படும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறும் என்று கூறுகிறார் மோட்ரிக்.
நடுக்களத்தில் பிரேசில் நட்சத்திரம் நெய்மாரின் அச்சுறுத்தல் குறித்து மோட்ரிக் கூறுகையில், "பார்சிலோனாவில் நெய்மார் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் பிரேசில் அணிக்கு ஆடும்போது அவர் உண்மையில் அபாயகரமானவர். ஆனாலும் அவரை நிறுத்த வழிமுறைகளை வைத்திருக்கிறோம்" என்றார்.
மாறாக முதல் போட்டியில் சாதாரணமாக வெல்வதை விட பிரேசில் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் பிரேசில் அணி தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
உலக சாம்பியன் ஸ்பெயின் அணியை கான்பெடரேஷன் கோப்பை இறுதியில் 3-0 என்று வீழ்த்திய அதே பிரேசில் அணியையே நாளை களமிறக்க வாய்ப்பிருப்பதாக பயிற்சியாளர் லூயிஸ் பிலிப் ஸ்கோலாரி தெரிவித்துள்ளார்.