Published : 18 Jan 2021 18:58 pm

Updated : 18 Jan 2021 20:22 pm

 

Published : 18 Jan 2021 06:58 PM
Last Updated : 18 Jan 2021 08:22 PM

ஒவ்வொரு ஓவரின் முதல் பந்தும் நோபால்: நடராஜன் மீது ‘ஸ்பாட் பிக்ஸிங்’ சந்தேகத்தைக் கிளப்பிய ஷேன் வார்னர்: நெட்டிசன்கள் வறுத்தெடுப்பு

shane-warne-alleges-something-suspicious-in-t-natarajans-no-balls-fans-slam-the-australian
இந்திய வீரர் நடராஜன்: கோப்புப் படம்.

இந்திய அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நோ-பால் வீசியதை ஸ்பாட் பிக்ஸிங்குடன் தொடர்புபடுத்தி ஆஸி.முன்னாள் வீரர் ஷேன் வார்ன் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

கடினமான குடும்பச் சூழல் பின்னணியில் இருந்து சாதித்துவரும் நடராஜன் போன்ற திறமையான வீரர்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கும் நோக்கில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பும் ஷேன் வார்னேவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து, சாடி வருகின்றனர்.


இந்திய அணிக்குள் நெட் பந்துவீச்சாளராக இடம் பெற்ற நடராஜன், ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளன. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆனால், ஷேன் வார்ன் மட்டும் புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

பிரிஸ்பேனில் தற்போது இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் நடராஜன் 7 நோ-பால்களை வீசினார். அதில் 2 நோபால்களை இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வீசினார். இதைப் பார்த்த வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்ன், நடராஜன் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் முதல்பந்து நோ-பாலாக வீசப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

வர்ணனையாளர் அறையில் இருந்த ஷேன் வார்ன் பேசுகையில், “நடராஜன் பந்துவீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. நடராஜன் 7 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால்,(5ஓவர்) ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் ஒரு நோ-பால் வீசியதுதான் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நடரஜான் நோ-பால் வீசியது இயல்பான சம்பவம். அதிலும் முதன்முதலாக டெஸ்ட் போட்டிக்குள் அறிமுகமாகும் வீரர் பதற்றத்தில் நோ-பால் வீசுவது இயல்பு. ஆனால், இதை மறைமுகமாக ஸ்பாட் பிக்ஸிங்குடன் தொடர்புபடுத்தி வார்ன் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் ஷேன் வார்ன் விளையாடும்போது, ஸ்பாட் பிக்ஸிங் புகார்களைச் சந்திக்கவில்லையா. இலங்கையில் சிங்கர் கோப்பை நடந்தபோது, புக்கிகளுக்கு ஆடுகளத்தின் தன்மை, காலநிலை போன்ற தகவல்களை வழங்கி மார்க் வாஹ், வார்ன் சிக்கவில்லையா. அப்போது வார்ன் மீது எழுந்த புகாருக்கு இதுவரை விளக்கம் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்தில் உப்புக் காகிதத்தைத் தேய்த்து ஓராண்டு தடை பிறப்பிக்கப்பட்டபோது, தங்கள் நாட்டு வீரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி வார்ன் வாய் திறக்கவில்லை.

ஆனால், ஓராண்டுக்குப் பின் ஸ்மித்தை அணியில் சேர்க்க மட்டும் வார்ன் பரிந்துரைத்தார்.
ஆனால், நடராஜன் போன்ற எளிமையான குடும்பத்தில், கடினமான குடும்பப் பின்னணியில் வளர்ந்து, இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்கும் தறுவாயில் ஆஸி.வீரர் வார்ன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

முத்தையா முரளிதரன், சுனில் நரேன் போன்ற பல ஆசிய வீரர்கள் சாதிக்கும் தறுவாயில், ஆஸி. நடுவர்களும், ஆஸி. வீரர்களும் இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளையும், சேற்றை வாரி இறைப்பதும் தொடர்ந்து வருகிறது.

ஷேன் வார்ன் குற்றச்சாட்டுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. வர்ணனையாளர் ஹர்ஸா போக்ளேவுக்கு ரீட்வீட் செய்து ரசிகர் ஒருவர், “ஹர்ஸா தயவுசெய்து வார்னேவுக்குப் பதிலடி கொடுங்கள். நடராஜன் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தைக் கிளப்புகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

“நடராஜனை ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சேர்க்கும்போதே, ஷேன் வார்ன் உங்களின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது” என ரசிகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நடராஜன் குறித்து தரக்குறைவான குற்றச்சாட்டு கூறிய ஷேன் வார்ன் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.


தவறவிடாதீர்!

Natarajans no ballsShane Warne allegesSuspiciousFans slam the AustralianNatrajan of spot-fixingஷேன் வார்ன்நடராஜன் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார்ஷேன் வார்ன் புகார்பிரிஸ்பேன் டெஸ்ட்நடராஜன் நோ-பால் வீச்சு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x