Last Updated : 18 Jan, 2021 06:24 PM

 

Published : 18 Jan 2021 06:24 PM
Last Updated : 18 Jan 2021 06:24 PM

இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்

இந்திய அணியுடன் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அடைந்த தோல்வியை விட மோசமானது என்று ஆஸ்திரேலிய அணியை அதன் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸி. பயணத்துக்கு வந்த இந்திய அணி, டெஸ்ட் தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து காயத்தால் பல முக்கிய வீரர்களை இழந்துள்ளது. கேப்டன் கோலி குழந்தைப் பிறப்பு காரணமாக விடுப்பில் சென்றார். முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, ஹனுமா விஹாரி எனத் தொடர்ச்சியாக வீரர்கள் சென்றுவிட்டார்கள்.

இருப்பினும் இந்திய அணி தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்குக் கடும் நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திறமையாகச் செயல்பட்டு வருகிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 328 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடி வருகிறது.

நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரிஸ்பேனில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், தொடரை டிரா செய்வதற்கு இந்திய அணி முயன்றாலும் அது இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிதான். பார்டர்-கவாஸ்கர் தொடரை இந்திய அணி தக்கவைக்கும்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வென்ற பார்டர்- கவாஸ்கர் கோப்பை மீண்டும் இந்தியா வசம் இருக்கும். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி நாளை வெல்ல வேண்டும், டிரா செய்ய முயலக் கூடாது என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாண்டிங் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்திய அணியுடன் தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி டிரா செய்தால், அது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் தொடரை இழந்ததைவிட மோசமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன்.

20 வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி எவ்வளவு கடினமாக தொடரை நடத்திச் செல்கிறார்கள். ஆனால், இரு போட்டிகளாக டேவிட் வார்னர் அணிக்குத் திரும்பிவிட்டார். ஸ்மித் விளையாடி வருகிறார். ஆனால், இன்னும ஆஸி. அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ஆதலால், டெஸ்ட் தொடரை டிரா செய்யும் நினைப்பில் ஆஸி. வீரர்கள் விளையாடினால், அது தோல்வியை விட மோசமானதாக அமைந்துவிடும். இந்திய அணியின் எதிர்ப்பு ஆட்டம், தடுப்பாட்டம், மன உறுதி பல சமயங்களில் நன்றாகத் தெரிகிறது.

இந்திய வீரர்கள் எதையும் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போதுள்ள மன உறுதியைத் தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள். நாளைய ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்களின் மன உறுதியான ஆட்டத்தைப் பார்க்க முடியும்.

ஆட்டத்தின் கடைசி நாளை பெரும்பாலும் டிரா செய்வதற்குதான் இந்திய அணியினர் முயல்வார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணி டிரா செய்யும் மனநிலையோடு இல்லாமல், வெற்றிக்காக முயன்று தொடரை வெல்ல வேண்டும்.

ஆட்டம் தொடங்கும் முதல் ஒரு மணி நேரம் இந்திய அணிக்கு முக்கியமானது. அவர்கள் விக்கெட்டை இழக்காவிட்டால், அவர்கள் எளிதாக அடுத்தடுத்து ஸ்கோர் செய்துவிடுவார்கள். நாளை 98 ஓவர்கள் வீச வேண்டும். 324 ரன்கள் இலக்கு என்பது எளிதாக அடைந்துவிடும் இலக்கு என்றாலும், காபா மைதானத்தில் இலக்கை எட்டியதில்லை.

இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ரிஷப் பந்த் போன்ற கீழ்வரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தைத் திசை திருப்பிவிடுவார்கள். ஆதலால், ரன் ரேட்டை உயரத்தவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்''.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x