Last Updated : 17 Jan, 2021 03:14 AM

 

Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஆற்றில் வீசிய தங்கப்பதக்கம்

குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த முகமது அலியின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 17).

தன் வாழ்நாளில் குத்துச்சண்டை களத்தில் மட்டுமின்றி, நிறவெறிக்கு எதிராகவும் கடுமையான போராட்டத்தை முகமது அலி சந்தித்துள்ளார். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக நிலவிய இனவெறியைக் கண்டித்து, ஒலிம்பிக்கில் தான் வாங்கிய தங்கப் பதக்கத்தையே ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1960-ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது.

1960-ம் ஆண்டில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவின் சார்பில் முகமது அலியையும் அனுப்ப அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதைக் கேள்விப்பட்ட முகமது அலி, முதலில் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்பவில்லை. விமானத்தில் பயணம் செய்வது அவருக்கு பயத்தைக் கொடுத்ததால், இப்போட்டியில் பங்கேற்க அவர் விரும்பவில்லை. ஆனால் பிறகு நண்பர்களின் வலியுறுத்தலால் அவர் ரோம் நகருக்கு பறந்தார். விமானம் பறந்துகொண்டிருந்த நேரம் முழுவதும், அவர் தன் உடலில் பாராசூட்டைக் கட்டியபடியே இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி பயத்துடன் ரோம் நகருக்கு பறந்தவர், அங்கு குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்று திரும்பிய முகமது அலிக்கு, அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தச் சூழலில், பதக்கம் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், கருப்பினத்தைச் சேர்ந்த முகமது அலிக்கு உணவு பரிமாற மறுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த முகமது அலி, ஓட்டலில் இருந்து வெளியேறினார். கடும் கோபத்துடன் ஓஹியோ ஆற்றுப் பகுதிக்கு சென்றவர், ஒலிம்பிக்கில் தான் வாங்கிய தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். 1975-ம் ஆண்டு எழுதிய சுயசரிதையில் முகமது அலி இதைக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x