Last Updated : 14 Jan, 2021 03:19 AM

 

Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

விளையாட்டாய் சில கதைகள்: அசாருதீனுடன் மோதிய சித்து

கிரிக்கெட் போட்டிகளில் பொதுவாக, தங்களுக்கு பிடித்த அல்லது ஆடப்போகும் மைதானத்துக்கு ஏற்ற வீரர்களை கேப்டன்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு கேப்டன் மீது சற்று வருத்தம் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் அது சண்டையாகவும் மாறும். அப்படி ஒரு சம்பவம் 1996-ம் ஆண்டு நடந்தது.

1996-ல் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஆடும் வீரர்களின் பட்டியலில், தொடக்க ஆட்டக்காரரான நவஜோத் சிங் சித்துவை கேப்டன் அசாருதீன் சேர்க்கவில்லை. இதுபற்றி அவருக்கு தகவலும் தெரிவிக்கவில்லை.

மாறாக போட்டியில் ஆடவுள்ள வீரர்களின் பட்டியலை டிரெஸ்ஸிங் ரூமில் எழுதி ஒட்டி வைத்துள்ளார். இந்த பட்டியலை சித்து கவனிக்காததால், தான் அணியில் இருப்பதாகவே நினைத்துள்ளார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற அசாருதீன், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதாக கூறியதும், உடைமாற்றி பேடைக் கட்டத் தொடங்கியுள்ளார் நவஜோத் சிங் சித்து. அணியின் மற்ற வீரர்கள் சிலர், இதைப் பார்த்து சிரித்துள்ளனர். இந்த நேரத்தில்தான், தான் அணியில் இல்லை என்பது அவருக்கு தெரிந்துள்ளது. மூத்த வீரரான தன்னை அசாருதீன் அவமானப்படுத்தி விட்டதாக கொந்தளித்த சித்து, அணியில் இருந்து விலகி, உடனடியாக இந்தியாவுக்கு விமானம் ஏறினார்.

செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறிய சித்து, “என் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்பட விடமாட்டேன் என்று என் அப்பாவுக்கு உறுதி அளித்துள்ளேன். அதனால் இந்த தொடரில் இனியும் ஆடமாட்டேன்” என்றார்.

அதற்கு பதிலளித்த அசாருதீன், “வீரர்கள் பள்ளிச் சிறுவர்களைப்போல் நடந்துகொள்ளக் கூடாது. தனிநபர்களைவிட கிரிக்கெட் முக்கியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x