2,804 நாட்களுக்குப் பின் முதல் விக்கெட்; இது தொடக்கம்தான்: மைதானத்தை வணங்கி பந்துவீசிய ஸ்ரீசாந்த்

முதல் ஓவரை வீசும்போது மைதானத்தை தொட்டு வணங்கிய ஸ்ரீசாந்த் : படம் உதவி ட்விட்டர்
முதல் ஓவரை வீசும்போது மைதானத்தை தொட்டு வணங்கிய ஸ்ரீசாந்த் : படம் உதவி ட்விட்டர்
Updated on
1 min read

7 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று, கேரள அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மைதானத்தை வணங்கி முதல் ஓவரை வீசி, முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது. கடந்த 2,804 நாட்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ஸ்ரீசாந்த், முதல் முறையாக சயத் முஸ்டாக் அலி டி20 போட்டியில் கேரள அணிக்காக நேற்று களமிறங்கினார்.

மும்பையில் நடந்த புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் களமிறங்கி பந்துவீசினார்.

இந்தப் போட்டியில் ஸ்ரீசாந்த் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
37 வயதாகும் ஸ்ரீசாந்த் இன்னும் தன்னுடைய பந்துவீச்சில் எந்தவிதமான வேகக்குறைபாடும் இல்லாமல் வீசினார். புதுச்சேரி பேட்ஸ்மேன் பபித் அகமதுவை க்ளீன் போல்ட் ஆகச் செய்து தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

20 ஓவர்களில் புதுச்சேரி அணி 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கேரள அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்க வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்ரீசாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. இது தொடக்கம்தான். உங்களின் வாழ்த்துகள், பிரார்த்தனைகளால் இன்னும் அதிகமான தொலைவு செல்வேன். உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் அதிகமான மதிப்பு வைத்திருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டுக்கும், பிசிசிஐக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in