Last Updated : 11 Jan, 2021 08:16 AM

 

Published : 11 Jan 2021 08:16 AM
Last Updated : 11 Jan 2021 08:16 AM

ரிஷப் பந்த் காட்டடி அரைசதம்: ஆஸி.க்கு தோல்வி பயம்; நங்கூரமிட்ட புஜாரா

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரிஷப்பந்த் : படம் உதவி ட்விட்டர்

சிட்னி


சிட்னியில் நடந்துவரும் ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று ரிஷப்பந்தின் காட்டடி அரைசதத்தால் இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளது.

2-வது இன்னிங்ஸில் 407 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கடைசி நாளான இன்று பிற்பகல் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப்பந்த் 75 ரன்களுடனும், புஹாரா 150-க்கும் மேலான பந்துகளைச் சந்தித்து 46 ரன்களுடன் நங்கூரமிட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 192 ரன்கள் தேவைப்படுகிறது. இன்றைய நாளில் இன்னும் 57 ஓவர்கள் வரை வீசப்பட வேண்டும் என்பதால், வெற்றிக்காக முடிந்தவரை முயற்சிக்கலாம் இல்லாவிட்டால் டிரா செய்தாலே போதுமானதாகும்.

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கும், இந்திய அணி 244ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 94 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

407 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ேநற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்திருந்தது. ரஹானே 4 ரன்களிலும், புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இன்றைய கடைசி நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரஹானே, புஜாரா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே லேயான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ரஹானே வெளியேறினார்.

அடுத்து ரிஷாப் பந்த் வந்து புஜாராவுடன் சேர்ந்தார். வழக்கமாக ஹனுமா விஹாரிதான் களமிறங்க வேண்டும். ஆனால், வலது இடது பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதால், ரிஷப்ப்த் களமிறக்கப்பட்டார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

தொடக்கத்தி்ல் நிதானமாக ஆடிய ரிஷப்பந்த், 35பந்துகள் வரை மெதுவாகவே ரன்கள் சேர்த்தார். ஆனால், திடீரென லேயான் ஓவரை வெளுத்துக் கட்டத் தொடங்கினார் பந்த். லேயான் வீசிய இரு ஓவர்களில் சிக்ஸர், 3பவுண்டரி அடித்து ஆஸி வீரர்களின் திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

அதன்பின் நாதன் லேயான் பந்துவீச்சை ரிஷப்பந்த் வெளுத்து வாங்கி சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்டார். டெஸ்ட் போட்டி எனப் பாராமல் டி20 போட்டி போல் ரிஷப்பந்த் ஆடத் தொடங்கினார்.

சுழற்பந்துவீச்சை மாற்றி மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ் என பந்துவீச்சை கேப்டன் பெய்ன் மாற்றியும் ரிஷப்பந்த்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ரிஷப்பந்த் பேட்டிங் செய்யும்போது பீல்டர்களை தொலைவில் நிற்க வேண்டும், புஜாரா பேட்டிங் செய்யும்போது பீல்டர்களை அருகே நிற்க வைக்க வேண்டும் என மாறிமாறி நிற்க வைத்து ஆஸி. வீரர்கள் வெறுத்துப் போயினர்.

அதிரடியாக ஆடிய ரிஷப்பந்த், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு அதிரடியாக 100 ரன்களைக் கடந்தனர்.

இந்திய அணியின் இந்த எதிர்பாராத தாக்குதல் ஆட்டத்தையும், போராட்டத்தையும் பார்த்து ஆஸி. வீரர்கள் தோல்விப் பீதியில் உறைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x