

கிரிக்கெட்டில் ‘இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனாலேயே அவர் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் வளர்ந்தது பெங்களூருவாக இருந்தாலும், அவர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் அப்பா சரத், கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்துள்ளார். அடிக்கடி அவர் ஆடும் போட்டிகளை நேரில் காணச் சென்றதால், ராகுல் டிராவிட்டையும் கிரிக்கெட் ஆசை தொற்றிக் கொண்டுள்ளது. டிராவிட்டுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். சிறுவயதில் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுள்ளார் டிராவிட். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் கவாஸ்கர் முதல் பந்திலேயே அவுட் ஆக, ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் டிராவிட்.
பொதுவாகவே ராகுல் டிராவிட் என்றால் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்பவர், அதிரடியான ஷாட்களை அடிக்காதவர் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் 2003-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.
வீரராக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு வகித்து, பல இளம் பேட்ஸ்மேன்களை டிராவிட் உருவாக்கி வருகிறார். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என்று அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் இன்று இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.