Last Updated : 10 Jan, 2021 05:25 PM

 

Published : 10 Jan 2021 05:25 PM
Last Updated : 10 Jan 2021 05:25 PM

ஆஸி.யின் ‘அட்டாக்கிங்’ பந்துவீச்சில் தாக்குப் பிடிக்குமா இந்திய அணி? சிட்னி டெஸ்ட்டை டிரா செய்தாலே அதிசயம்

சிட்னியில் நடந்துவரும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆனால், சிட்னி மைதானத்தில் இந்த ஸ்கோரை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் புரிந்திருக்கும். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சார்களின் அட்டாக்கிங் (பாடிலைன்) பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து நாளைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வெற்றி பெறாவிட்டால்கூட, போட்டியை இந்திய அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய அதிசயமாகத்தான் இருக்க வேண்டும்.

4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 309 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன.

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் பும்ரா, முகமது சிராஜ், ஷைனி மூவரும் டெய்ல் என்டர்கள். அவர்கள் பேட்ஸ்மேன்கள் வரிசையில் வரமாட்டார்கள். ஜடேஜாவுக்குக் காயம் காரணமாக அவரும் பேட்டிங் செய்வது கடினம். ஆதலால், மீதமுள்ள 5 வீரர்கள் மட்டுமே நிதானமாக பேட்டிங் செய்வது அவசியம். சிட்னி போட்டியில் வெற்றி பெறுவதற்கு பதிலாக டிரா செய்ய முயன்றாலே அது மிகப்பெரிய விஷயமாகும்.

முதல் இன்னிங்ஸில் புஜாரா 150 பந்துகளைச் சந்தித்து அரை சதம் அடித்து கிரீஸில் ஆணி அடித்தாற்போல் நின்றிருந்தார். அதுபோன்ற ஆட்டத்தை 2-வது இன்னிங்ஸிலும் வெளிப்படுத்த வேண்டும். ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் ப்ந்த் ஆகியோரின் பேட்டிங் திறமையில்தான் இந்திய அணியின் வெற்றி தோல்வி அடங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இன்றைய தேநீர் இடைவேளைக்குப் பின்பே கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் மூவரும் மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினார்கள். அதிலும் கம்மின்ஸ் வேற லெவல் பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார். கம்மின்ஸின் சில லெக் கட்டர்கள், ஸ்விங்குகளை பேட்ஸ்மேன்கள் தெரியாமல் ஆக்ஷன் செய்தாலே விக்கெட்டை இழக்க நேரிடும். அந்த அளவுக்கு பேட்ஸ்மேன் உடலோடு உரசும் வகையில் பந்து சென்றது.

இந்நிலையில் வெற்றியா, தோல்வியை என நிரூபிக்கும் கடைசி நாள் நாளை என்பதால், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள், பவுன்ஸர்கள் அனைவரின் இலக்கும் இந்திய வீரர்களின் உடலைக் குறிவைத்தே இருக்கும். இதை எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள், எவ்வாறு மீளப்போகிறார்கள் என்பதில்தான் எதிர்பார்ப்பு அடங்கியிருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஷாட் பிட்ச்சில் பலவீனமானவர்கள், அடித்து விளையாடத் தெரியாது எனும் பலவீனத்தை ஆஸி. பந்துவீச்சாளர்கள் புரிந்து கொண்டார்கள். அந்த பலவீனத்தின் மீதே தொடர்ந்து அடிக்கும்போது இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்த் தாக்குதல் நடத்தி கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும். இல்லாவிட்டால், விக்கெட்டை இழக்க நேரிடும்.

ஆதலால், நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வெல்லுமா, ஆஸி.யின் பந்துவீச்சு தோற்குமா என்பது தெரிந்துவிடும். சிட்னி ஆடுகளம் நன்றாக பேட்டிங்கிற்கு ஒத்துழைத்து வருகிறது. அதை எவ்வாறு நமது பேட்ஸ்மேன்கள் கையாளப் போகிறார்கள் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணியின் லாபுஷேன் 47 ரன்களிலும், ஸ்மித் 29 ரன்களிலும் இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் அரை சதம் அடித்தனர். லாபுஷேன் 2-வது இன்னிங்ஸிலும் தொடர்ச்சியாக அரை சதம் அடித்தார். 2019-ம் ஆண்டில் ஹெடிங்கிலி டெஸ்ட்டில் இதேபோன்று இரு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து லாபுஷேன் ஆட்டமிழந்தார். அதன்பின் இது 2-வது முறையாகும்.

73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷைனி பந்துவீச்சில் லாபுஷேன் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த மேத்யூ வேட் 4 ரன்களில் ஷைனியிடம் விக்கெட்டை இழந்தார்.

கேமரூன் க்ரீன், ஸ்மித்துடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். இந்தியப் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிய க்ரீன், 116 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஸ்மித் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் மீண்டும் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். பும்ரா பந்துவீச்சில் கிரீன் 132 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார். பெய்ன் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.

87 ஓவர்களில் ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 312 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், ஷைனி தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

இதையடுத்து, 407 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி ஸ்டார்க் பந்துவீச்சில் சில அற்புதமான ஷாட்களை ஆடி பவுண்டரிகள் அடித்தார். க்ரீன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும் விளாசினார். கில்லும் மிகவும் நேர்த்தியான ஷாட்களால் பவுண்டரிகள் அடித்து ரன்களைக் குவித்தார்.

கில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணியன் தொடக்க ஆட்டக்காரர்கள் 140 ரன்களுக்கும் மேல் சேர்த்துள்ளனர். சிட்னி மைதானத்தில் 53 ஆண்டுகளுக்குப் பின் இந்திய தொடக்க ஜோடி இரு இன்னிங்கிஸிலும் சேர்த்து 123 ரன்களைக் கடப்பது இதுதான் முதல் முறை. இதற்கு முன் இந்தியாவின் பரூக், சயத் அபித் அலி ஆகியோர் சேர்த்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஆசிய மைதானத்துக்கு வெளியே இந்தியத் தொடக்க ஜோடி100 ரன்களுக்கு மேல் இரு இன்னிங்ஸிலும் சேர்த்தது கடந்த 2010-ம் ஆண்டில்தான். தென் ஆப்பிரிக்காவில் நியூ செஞ்சூரியனின் சேவாக், கம்பீர் ஜோடி 138 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்துவந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். புஜாரா ஆமை வேகத்தில் பேட்டிங் செய்ய, ரோஹித் சர்மா அரை சதம் அடித்த நிலையில், 52 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 4 ரன்களிலும், புஜாரா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x