Last Updated : 10 Jan, 2021 03:27 AM

 

Published : 10 Jan 2021 03:27 AM
Last Updated : 10 Jan 2021 03:27 AM

விளையாட்டாய் சில கதைகள்: வறுமையை வென்ற மீராபாய் சானு

இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்தமாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. அவருக்கு கடைக்குட்டியாய் பிறந்த மகள்தான், பல சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் மீராபாய் சானு. போட்டிகளில் அதிக அளவு எடையைத் தூக்கும் மீராபாய் சானு, சிறுவயதில் தங்கள் வீட்டின் வறுமையால் காட்டில் இருந்து விறகுக் கட்டைகளைத் தூக்கி வந்துள்ளார்.

இதுபற்றி கூறும் அவரது அண்ணன் சனதோம்பா, “வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு, என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

வறுமை நிறைந்த சிறுபிராயத்தில், மீராபாயை பளுதூக்கும் போட்டிக்கு கவர்ந்திழுத்தவர் குஞ்சராணி தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், பளுதூக்கும் போட்டியில் சாதனைகளைப் படைக்க, அதைப் பார்த்து மீராபாய் சானுவுக்கும் இதே விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. கால்பந்து வீரரான அவரது அண்ணன் சனதோம்பாவும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால் பயிற்சி மையமோ அவரது வீட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. இதற்காக தினமும் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது.

தன் ஆரம்ப நாட்களைப் பற்றி கூறும் மீராபாய் சானு, “பயிற்சி மையத்தில் சேர்ந்ததும், நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்கிறார்.

இந்த வறுமையால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. அனைத்தையும் வென்றவர், இன்று ‘இந்தியாவின் தங்க மங்கை’யாக மின்னுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x