விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய தங்க மங்கை

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய தங்க மங்கை
Updated on
1 min read

பி.டி.உஷாவுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கொடியை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஹிமா தாஸின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 9).

ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி. மேற்கொண்டு வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவருடன் தினமும் பயிற்சிக்கு சென்றதால் ஹிமா தாஸும் கால்பந்து வீராங்கனையாக உருவெடுத்தார்.

இந்த நிலையில்தான் சம்சுல் ஹக் என்ற ஆசிரியர், உள்ளூர் கால்பந்து போட்டியில் ஹிமா தாஸ் வேகமாக ஓடுவதைப் பார்த்துள்ளார். ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாரே’ என்ற எண்ணத்தில் ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார். அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளரான நிப்பான் தாஸின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.

இத்தனை நாட்களாக அவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்ற எண்ணத்தில் அவரை வாரி அணைத்துக்கொண்டார். ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க முன்வந்தார்.

முதலில் ஹிமாவின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் பயிற்சியாளர் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தார்.அன்றிலிருந்து ஹிமா தாஸின் வாழ்க்கை மாறியது. உள்ளூரில் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற அவர், குவாஹாட்டியில் விளையாட்டு ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள உயர்தர சின்தடிக் டிராக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார். அந்தப் பயிற்சியின் விளைவாக இன்று சர்வதேச ஓட்டப் பந்தயங்களில் இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in