Published : 07 Oct 2015 09:53 AM
Last Updated : 07 Oct 2015 09:53 AM

ஹாக்கி டெஸ்ட் தொடர்: இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

நியூஸிலாந்துக்கு எதிரான 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது இந்தியா.

நியூஸிலாந்தின் நெல்சனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளுமே அபாரமாக ஆடின. எனினும் ஆட்டத்தின் 5-வது நிமிடத்தில் நியூஸிலாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நிக் ஹெய்க் கோலடித்தார்.

இதன்பிறகு இந்தியாவின் நிகின் திம்மையா உள்ளிட்ட வீரர்கள் கோலடிப்பதற்கு தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டபோதும், நியூஸிலாந்தின் வலுவான பின்களத்தை தாண்டி முன்னேற முடியவில்லை. முதல் கால் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

2-வது கால் ஆட்டத்திலும் இந்திய அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை ஆடியது. இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் கொடுத்த பாஸை ரமன்தீப் சிங் கோலாக்க தவறினார். இதன்பிறகு நியூஸிலாந்து அணி எதிர்த்தாக்குதலில் இறங்க, 27-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜேர்ட் பன்சியா கோலடித்தார். இதனால் நியூஸிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு இந்தியா சரிவிலிருந்து மீள்வதற்கு முயற்சி எடுத்தபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் நியூஸிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் நெல்சனில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x