Last Updated : 08 Jan, 2021 03:08 PM

 

Published : 08 Jan 2021 03:08 PM
Last Updated : 08 Jan 2021 03:08 PM

சதம் அடித்து ஃபார்முக்கு வந்த ஸ்மித்; ஜடேஜா, கில் அசத்தல்; ஷைனி சொதப்பல்: இந்திய அணி நிதான ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் சதம் அடித்த ஸ்மித்: படம் உதவி | ட்விட்டர்.

சிட்னி

சதம் அடித்து இழந்த ஃபார்மை மீட்ட ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேனின் பேட்டிங் ஆகியவற்றால் சிட்னியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளாக சொதப்பலாக பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்தில் சதம் அடித்து 226 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு எதிராக 8-வது சதத்தை ஸ்மித் பதிவு செய்தார். துணையாக ஆடிய லாபுஷேன் 196 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், லாபுஷேன், புகோவ்ஸ்கி ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் பங்களிப்பு செய்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இரு செஷன்களிலும், ஆஸ்திரேலிய அணி 51 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், ஷுப்மான் கில், தனது 2-வது போட்டியிலேயே அரை சதம் அடித்து அசத்தினார். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்துள்ளது.

சிட்னி ஆடுகளம் தட்டையானது, கடினமானது, புற்கள் நிறைந்தது. முதல் இரு நாட்கள் மெதுவான பந்துவீச்சுக்கு அதாவது சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது. ஆனால், மழை,பனி ஆகியவற்றைப் பொறுத்து, ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் அடுத்துவரும் நாட்களில் நன்கு ஒத்துழைக்கும்.

அடுத்த 3 நாட்களும் இரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்திய அணி பேட்டிங்கில் சாதிக்குமா, ஆஸி. பந்துவீச்சில் மிரட்டுவார்களா எனத் தெரிந்துவிடும்.

இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் அருமையாகச் செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஷைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அனுபவமற்ற தனது பந்துவீச்சை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார். அதிகமான நோபால்கள், லைன்-லென்த் தவறி வீசுதல் என ஏராளமான தவறுகளைச் செய்தார்.

டி20 போட்டிபோல் பந்துவீசிய ஷைனி 13 ஓவர்கள் வீசி 65 ரன்களை வாரி வழங்கினார். பும்ரா, சிராஜ் ஆகியோர் பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்திய நிலையில் ஷைனி பந்துவீச்சைக் குறிவைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவித்தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்மித் 31 ரன்களிலும், லாபுஷேன் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஸ்மித், லாபுஷேன் இருவரும் பும்ரா, சிராஜ் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களைச் சேர்த்தனர். கடந்த இரு போட்டிகளில் செய்த எந்தத் தவறையும் பேட்டிங்கில் ஸ்மித் செய்யவில்லை. பும்ரா வீசிய சில அருமையான லெக் கட்டர்களை லீவ் செய்து ஸ்மித் தனது பேட்டிங் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டு தடைப்பட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் தொடங்கியது. நிதானமாக ஆடிய ஸ்மித் 116 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே லாபுஷேன் 91 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த மேத்யூ வேட் (13) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும், க்ரீன் (5) ரன்களில் பும்ரா பந்துவீச்சிலும் விக்கெட்டை விரைவாக இழந்தனர். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தாலும், சதம் அடிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் ஸ்மித் நிதானமாக ஆடினார். உணவு இடைவேளைக்குப் பின் பேட்டிங் செய்த கேப்டன் பெய்ன் ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அடுத்தவந்த கம்மின்ஸ் டக் அவுட்டில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார்.

206 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. 9-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டார்க், ஸ்மித்துடன் சேர்ந்து அதிரடியான ஷாட்களை ஆடினார். ஷைனியின் பந்துவீச்சில் பவுண்டரிகளையும் சிக்ரையும் ஸ்டார்க் விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

200 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக தனது 8-வது சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் அரங்கில் இது 3-வது சதமாகும். ஸ்டார்க் 24 ரன்களில் ஷைனி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

9-வது விக்கெட்டுக்கு வந்த நாதன் லேயான் கால்காப்பில் வாங்கி ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஸ்மித் 131 ரன்களில் ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, ஷைனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். கடந்த 2 மாதங்களுக்குப் பின் சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா ஆடினார். இருவரையும் தொடக்கத்தில் இருந்தே அடிக்கவிடாமல் ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், லயான் ஆகியோர் நெருக்கடியாகப் பந்துவீசினர்.

தேநீர் இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. அதன்பின் ஷுப்மான் கில் தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பினார். சில அருமையான ஷாட்களை ஸ்டார்க், லாபுஷேன் பந்துவீச்சில் கில் ஆடினார். 100 பந்துகளில் ஷுப்மான் கில் தனது டெஸ்ட் அரங்கில் முதல் அரை சதத்தை நிறைவு செய்தார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் சேர்த்த நிலையில் கில் 50 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். நீண்டநேரம் நிலைக்காத ரோஹித் சர்மா 26 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

புஜாரா 9 ரன்களிலும், ரஹானே 5 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் சேர்த்து 242 ரன்கள் பின்தங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x