

மெல்போர்னில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியைப் பார்த்த ரசிகருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, போட்டியைக் காண வந்திருந்த மற்ற ரசிகர்களும் , தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா பரிசோதனை செய்ய ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
மெல்போர்ன் நகரில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இந்தப் போட்டியின் 2-வது நாளின் போது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு ரசிகர் போட்டியைக் காண வந்துள்ளார். அவர் போட்டியை பார்த்துவிட்டுச் சென்றபின், அவருக்கு உடல்நலமில்லாமல் போனதையடுத்து, நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தி டெலிகிராப் நாளேட்டில் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் அளி்த்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இ்ந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் போட்டியைப் பார்த்துவிட்டுச் சென்ற 30 வயதுமதிக்கத்தக்க சிகருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ரசிகர் போட்டியை பார்த்துவிட்டு அதன்பின் அருகே இருந்த வர்த்தக மையத்துக்கும் சென்றுள்ளார். இதனால், அந்த நபருக்கு கரோனா தொற்று விளையாட்டு அரங்கில் உண்டானதா, அல்லது வணிக வளாகத்துக்குச் சென்று பொருட்கள் வாங்கியபோது தொற்று ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆதலால், மெல்போர்ன் மைதானத்தில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியின் போது, தி கிரேட் சதர்ன் ஸ்டான்ட், பகுதியில் ஜோன் 5-ம் வளாகத்தில் நண்பகல் 12.30 மணிமுதல் பிற்பகல் 3.30 வரை அமர்ந்து போட்டியைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதியாகும் வரை தனிமையில் இருக்கவும் அறிவுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிட்னியில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரங்கின் ரசிகர்கள் அமரும் இருக்கையின் எண்ணிக்கையில் 25 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.