

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி கோவா அணியை 4-0 என்ற கோல்கணக்கில் தோற் கடித்தது. இப்போட்டியில் சென்னை அணியின் மென்டோசா வாலென்ஷியா 3 கோல்களை அடித்தார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று படோர்டாவில் நடந்த போட்டியில் சென்னையின் எ.சி அணி, கோவா அணியை சந்தித்தது. ஏற்கெனவே 2 போட்டிகளில் தோற்றதால் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை அணியினர் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மைதானத்தில் சிட்டாய் பறந்து தாக்குதல் நடத்தினர்.
ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இலானோ பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றி சென்னை அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் வாலென்ஷியா. இதைத் தொடர்ந்து 43-வது நிமிடத்தில் இலானோ கோல் அடிக்க சென்னை அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் விஸ்வரூபமெடுத்த வாலென்ஷியா மேலும் 2 கோல்களை அடிக்க சென்னை அணி 4-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை ருசித்தது.