

இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் மீது ஷேன் வார்ன் கடும் விமர்சனம் வைத்தார். இம்முறை அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் விலகியிருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
டெலிகிராப் பத்திரிகையில் பத்தி எழுதி வரும் ஷேன் வார்ன் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டனை கடுமையாக விமர்சனம் செய்து வருவது சர்ச்சைக்குரியதாகி விட்டது.
குக், சமீபத்தில் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று கூறியதோடு தனது கேப்டன்சி வெற்றி சுயபுராணத்தையும் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் இலங்கை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வீழ்த்தியிருப்பதையடுத்து மேலும் கடுமையான விமர்சனங்களை தனது பத்தியில் எழுப்பியுள்ளார் ஷேன் வார்ன்.
அவர் கூறியிருப்பதாவது:
அலிஸ்டர் (cooked) குக் என்று கேலியுடன் துவங்கிய ஷேன் வார்ன், "குக்கைப் பொறுத்தவரை 3 விதமாக அணுகப்படலாம். ஒன்று மண்ணில் தலையைப் புதைத்து நடப்பது நடக்கட்டும், அவர் நிச்சயம் பேட்டிங்கில் ரன்கள் எடுக்கத் தொடங்குவார் என்றும் எங்கிருந்தாவது அவரது கேப்டன்சியில் புத்திசாலித் தனம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்றும் நம்புவது.
2வது, கேப்டன்சியில் இருந்து குக் ஒதுங்கி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவது என்பதை அவருக்கு அறிவுறுத்துவது.
3வது அவருக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கொடுப்பது.
நான் மட்டுமல்ல நான் கூறுவது போல் அனைவருமே கூறுகின்றனர். இது குக்கிற்கு எதிரான எனது தனி நபர் காழ்ப்பு கிடையாது. வேண்டுமானால் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானிடம் கேட்டுப்பார்க்கலாம், அல்லது நாசர் ஹுசைனிடம் கேட்டுப்பார்க்கலாம்.
அவர் ஆஸ்திரேலியாவிடம் வாங்கிய 5-0 தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.
அவர் நேரடியாகச் சிந்திப்பதில்லை, குழப்பமாக உள்ளார், அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவரைப் போன்ற மனநிலை உள்ளவர்கள் கேப்டன்சியை எடுத்துக் கொள்ளக்கூடாது.
கடந்த திங்களன்று லீட்ஸில் இவரது கேப்டன்சி படு மோசம், 25 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மோசமான ஒரு கேப்டன்சியை நான் பார்த்ததில்லை.
ஆஞ்சேலோ மேத்யூசை அவுட் செய்ய குக் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. ஒன்று ஸ்பின்னை மாற்று, அல்லது வேகப்பந்து வீச்சை மாற்று ஒன்றுமே செய்யாமல் சொத்தையான பந்து வீச்சை ஓவருக்கு ஓவர் கொடுத்துக் கொண்டிருந்தார் குக்.
இவ்வாறு கடுமையான விமர்சனம் வைத்தார் ஷேன் வார்ன்.