

வியட்நாம் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதுதான் இந்த சீசனில் அவர் வென்ற முதல் ஒற்றையர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமின் ஹாவ் சி மின் சிட்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைனேனி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்ஸனை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த மைனேனி 6 பிரேக் பாயிண்ட்களில் 5-ஐ மீட்டார்.
சேலஞ்சர் அளவிலான போட்டி யில் ஒற்றையர் பிரிவில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் மைனேனி. தற்போது சர்வதேச தரவரிசையில் 168-வது இடத்தில் இருக்கிறார் மைனேனி. இன்று புதிய தரவரிசை வெளியாகும்போது அவர் 150-வது இடத்துக்கு முன்னேறியிருப்பார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாகேத் மைனேனி-சனம் சிங் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வி கண்டது. இந்த ஜோடி 6-1, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் டிரிஸ்டான் லேமாசைன்-ஜெர்மனியின் நீல்ஸ் லாங்கர் ஜோடியிடம் தோல்வி கண்டது.