Published : 18 Oct 2015 05:21 PM
Last Updated : 18 Oct 2015 05:21 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒரு நாள்: இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிகா இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 270 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கும் அதிகமாக சேர்க்கும் என்ற நிலையிலிருந்த தென் ஆப்பிரிகா, கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் கட்டுப்பாடான பந்துவீச்சால்,அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நினைத்ததை விட குறைந்த ரன்களையே எடுத்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி காக் ஜோடி இந்தியப் பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டது. இந்த இணை 72 ரன்கள் எடுத்திருந்த போது மில்லர் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆம்லாவும் 5 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - ப்ளெஸ்ஸி ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான வேகத்தில் ரன்கள் சேர, ஒரு முனையில் பெள்ஸ்ஸி அரை சதமும், மறு முனையில் டி காக் சதத்தையும் கடந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது.

39-வது ஓவரில் மொஹித் சர்மா வீசிய பந்தை, டிவில்லியர்ஸ் போல பேட்டை வளைத்து பின்னால் அடிக்க முயன்ற ப்ளெஸ்ஸி, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவரை ஏறுமுகமாக இருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் இதற்குப் பிறகு சற்றே தடுமாறியது.

அடுத்த ஓவரில் டி காக் 103 ரன்களுக்கு ரன் அவுட் ஆக, அதற்கடுத்த ஓவரில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் அக்ஸர் படேலின் சுழலுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்குப் பிறகு வந்த டுமினியும், பெஹார்டைனும் ஏனோ அதிரடி ஆட்டம் ஆடாமல் பொறுமையை கடைபிடித்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டமாக இருந்தது. முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்தது. இந்திய தரப்பில் அக்சர் படேல், ஹர்பஜன், மிஷ்ரா என சுழற்பந்து வீச்சாளர்கள் மூவருமே கட்டுப்பாடான பந்துவீச்சில் அசத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x