

டெஸ்ட் போட்டி எளிதானது அல்ல. அதிலும் நடராஜன் கற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார். அவரின் ஸ்லோ-பால், யார்க்கர் இன்னும் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று நடராஜனின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று கலக்கிய தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றார். இந்திய அணியில் வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரராக இடம் பெற்ற நடராஜன், ஒருநாள், டி20 போட்டியில் இடம் பெற்று சிறப்பாகப் பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்திய அணியில் தற்போது உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதால், நடராஜன் டெஸ்ட் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
வரும் 7-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நடராஜன் இடம் பெறுவாரா அல்லது ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷர்துல் தாக்கூருக்கு ரஞ்சிக் கோப்பையில் அதிகமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது.சிவப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்யும் தாக்கூர், பந்துவீச்சில் பல்வேறு வகைகளை வெளிப்படுத்தும் அனுபவம் இருப்பதால், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
அதேசமயம், நடராஜனுக்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அனுபவம் குறைவு. டி20, ஒருநாள் போட்டி என வெள்ளைப்பந்தில் விளையாடிய அனுபவம் மட்டுமே இருப்பதாலும், அடுத்தடுத்து ஓவர்களை டெஸ்ட் போட்டிகளில் துல்லியமாக வீசுவாரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது.
இந்நிலையில் கடந்த இரு சீசன்களாக நடராஜனுக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்துவரும் திவாகர் வாசு, நடராஜன் திறமை குறித்து ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும் போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, அவர் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள். ஆனால், நடராஜன் உடனடியாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவார் எனக் கூற முடியாது, இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் நடராஜன் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகிவிட்டாரா எனப் பார்க்க வேண்டும். எவ்வாறு வாய்ப்புகளை பயன்படுத்துகிறார் என்பதைப் பொருத்து இருக்கிறது.
நடராஜன் இன்னும் பந்துகளை ஸ்விங் செய்வது அவசியம், சரியான லைன் லென்த்திலும் நடராஜன் பந்துவீச வேண்டும். பந்தை கட் செய்யும் முறைகளையும் கற்க வேண்டும். டெஸ்ட் போட்டி என்பது எளிதானது அல்ல. நடராஜனின் ஸ்லோபால், யார்கர் இன்னும் அழுத்தமாக இல்லை, இந்தப் பந்துவீச்சு டெஸ்ட் போட்டிகளுக்கு போதாது. நடராஜனின் 130 கி.மீ வேகமும் டெஸ்ட் போட்டிகளுக்கு போதுமானதாக இருக்காது என நினைக்கிறேன். நடராஜன் நன்றாக பந்துகளை ஸ்விங் செய்தால், லைன்,லென்த்தில் வீசினால் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.
பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு அடுத்தார்போல் 3-வது பந்துவீச்சாளரகத்தான் நடராஜனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நடராஜன் எதையும் முயற்சி செய்து பார்க்கக் கூடியவர், எதையும் கற்றுக்கொடுத்தாலும் விரைவாக புரிந்து கொள்வார் .
இவ்வாறு வாசு தெரிவித்தார்.