நடராஜனுக்கு வெல்லும் திறமை இருக்கிறது; சிராஜ் அளவுக்கு விளையாட முடியுமா ? டேவிட் வார்னர் சந்தேகம்

இந்திய அணி வீரர் டி நடராஜன் : கோப்புப்படம்
இந்திய அணி வீரர் டி நடராஜன் : கோப்புப்படம்
Updated on
2 min read


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜனுக்கு வெற்றி பெறக்கூடிய திறமை இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுவாரா என்பது உறுதியாகத் தெரியாது என ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடரஜானின் திறமையை நன்கு உணர்ந்திருந்தார். கடந்த ஐபிஎல் தொடர் முழுவதும் நடராஜனை சிறப்பாக வார்னர் பயன்படுத்தினார்.

ஆஸ்திரேலியத் தொடரில் வலைப்பயிற்சியில் பந்துவீச தேர்வான நடராஜன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு தேர்வாகி அதில் நடராஜன் பந்துவீசியதைப் பார்த்து வார்னர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிலையில் சிட்னி டெஸ்டில் ஆஸி அணியில் வார்னர் விளையாடி, இந்திய அணியில் நடராஜன் தேர்வாகினால், இருவரும் நேர் எதிர் சந்திக்க வேண்டியது இருக்கும். வார்னருக்கு எதிராக நடராஜன் பந்துவீச வேண்டியது இருக்கும்.

இந்நிலையில், காணொலி மூலம் வார்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, டெஸ்ட் போட்டியில் நடராஜன் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்று டேவிட் வார்னரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

நல்ல கேள்வி. நடராஜன் டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு பந்துவீசுவார் எனத் தெரியாது. வெள்ளைப்பந்தில் பந்துவீசுவதற்கும், சிவப்பு பந்தில் பந்துவீசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்தியாவில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் நடராஜன் பந்துவீசியது குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும், புள்ளிவிவரங்களை அறிந்திருப்பீர்கள் என்பதால், நான் சொல்ல வேண்டியது இல்லை.

லைன், லென்த்தில் நடராஜன் பந்துவீசுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து ஓவர்களில் அதேபோன்ற துல்லியத்தன்மையுடன் வீச முடியுமா, சாத்தியமா என்பது எனக்குத் தெரியாது.

முகமது சிராஜ் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். ரஞ்சிக் கோப்பையில் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டார் என்பதும் தெரியும். அந்த அனுபவத்தால் தொடர்ந்து சிராஜ் பந்துவீசுகிறார். சிராஜ் எவ்வாறு அறிமுகப் போட்டியி்ல் சிறப்பாகப் பந்துவீசினாரோ அதேபோன்று நடராஜனும் அறிமுகம் போட்டியில் பந்துவீசுவார்ா எனத் தெரியாது. ஆனால் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். ஆனால், அதற்கு நடராஜன் டெஸ்ட் அணியில் இடம் பெற்று, விளையாடும் 11பேர் கொண்ட அணியில் இருக்க வேண்டும்.

நடராஜனுக்கு ஆஸி. தொடருக்கு வந்தது மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரராக வந்து ஒருநாள், டி20 போட்டியில் இடம் பெற்று, இப்போது டெஸ்ட் போட்டிக்கும் வந்துவி்ட்டார் நடராஜன். அவர் விளையாடும் அணியில் இடம் பெறவும், சாதிக்கவும் வாழ்த்துகள்.

நடராஜன் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோது அவரின் பந்துவீச்சைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைத்து, விளையாடும் அணியிலும் இடம் பெற வேண்டும்.”

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in