

பார்முலா 1 கார் பந்தயம் என்றதும் நம் நினைவுக்கு வரும் பெயர் மைக்கேல் ஷுமேக்கர். 1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 என 7 ஆண்டுகள் பார்முலா 1 கார் பந்தயத்தில் வெற்றிக் கோப்பையை வசமாக்கியவர் மைக்கேல் ஷுமேக்கர்.
ஜெர்மனியில் உள்ள ஹர்ட் நகரில் 1969-ம் ஆண்டு பிறந்த ஷுமேக்கருக்கு சிறுவயது முதலே கார் பந்தயத்தில் காதலை ஏற்படுத்தியவர்கள் அவரது பெற்றோர். ஷுமேக்கருக்கு 6 வயதாக இருக்கும்போதே, சிறு குழந்தைகளுக்கான கார்ட்டிங் பந்தயத்தில் அவரை பங்கேற்கச் செய்து, அறிமுகப்படுத்தி உள்ளனர். அன்று தொடங்கிய கார் காதல், அவரை பல உச்சங்களுக்கு அழைத்துச் சென்றது. பந்தயக் கார்களின் காதலராக இருந்த ஷுமேக்கர், ஒருபோதும் சொகுசுக் கார்களை விரும்பியதில்லை. அவற்றை ஓட்ட அவர் அதிக ஆர்வம் காட்டியதில்லை. மாறாக எளிமையான வகை பியட் கார்களையே அவர் விரும்பினார்.
எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கவும் வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட ஷுமேக்கர், ஒருமுறை ஒரே செக்கில் 10 மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்தார்.
பொதுவாக பந்தய வீரர்கள் மழைக்காலத்தை விரும்புவதில்லை. இந்த சமயத்தில் கார் பந்தயம் நடந்தால், டயர்கள் வழுக்கிச் சென்று விபத்து ஏற்படுமோ என அவர்கள் பயப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக மழைக்காலத்தில் பந்தயத்தில் ஈடுபடுவதை ஷுமேக்கர் விரும்பினார். இப்பந்தயங்களில் வெற்றியும் பெற்றார். அதனால் அவரை ‘ரெயின் மாஸ்டர்’ என்றும், ‘ரெயின் கிங்’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
ஆபத்தான கார் பந்தயங்களை சுலபமாக கையாண்ட ஷுமேக்கர், 2013-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அதில் இருந்து அவர் கொஞ்சம் மீண்டாலும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.