

கிரிக்கெட்டில் இப்போதுள்ள நிலையில் ஓய்வு எனும் பேச்சுக்கே இடமில்லை. இன்னும் இரு டி20 உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடுவேன் என்று மே.இ.தீவுகள் வீரர், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.
மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். ஆனால், அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து விளையாடினார்.
ஓய்வு என கெயில் அறிவித்தாலும், அவரால் கிரிக்கெட்டை விட்டுச் செல்ல முடியவில்லை, தொடர்ந்து லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் முடிந்தபோதுகூட ஓய்வு குறித்து பேசினாலும் அதை கெயில் உறுதி செய்யவில்லை.
ஐக்கிய அரபுஅமீரகத்தில் நடந்த கடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் கெயில் விளையாடினாலும், கெயில் வந்தபின்புதான் ஐபிஎல் ஆட்டம் களைகட்டியது. 7 இன்னிங்ஸ் ஆடிய கெயில் 3 அரைசதங்களுடன் 288 ரன்கள் குவித்தார், இதில் 99 ரன்ககளில் கெயில் ஆட்டமிழந்தது சோகமாகும். 7 இன்னிங்ஸ்களில் கெயில் 41.4 பேட்டிங் சராசரியும், 137 ஸ்ட்ரைக்ரேட்டும் வைத்துள்ளார். இந்நிலையில் 2021ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை, 2022ம் ஆண்டில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ஸ்டார் நிறுவனம்சார்பில் நடத்தப்படும் அல்டிமேட் கிரிக்கெட் சேலஞ்ச்(யுகேசி) தொடர்பாக கிறிஸ்கெயில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தா். அப்போது, கெயிலிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கெயில் கூறுகையில் “ ஓய்வா, இப்போதுள்ள நிலையில், அதற்கு எந்த திட்டமும் இல்லை. எனக்கு வயது 41 ஆகிறது. இன்னும் 2 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடுவேன். அதாவது 45 வயதுக்கு முன்பாக ஓய்வுஎனும் பேச்சுக்கு வாய்ப்பை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அல்டிமேட் கிரிக்கெட் சேலஞ்ச் எனும் கிரிக்கெட் வித்தியாசமான விளையாட்டு. இந்த விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்காது. அதேநேரத்தில் பலவழிகளில் இந்த விளையாட்டு சிறப்பானதாக இருக்கும். இந்தப் போட்டி விளையாடத் தொடங்கும்போது அனைவரும் பார்க்கத் தொடங்குவார்கள். உள்ளரங்குகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டிலேயே மிகவும் வித்தியாசமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
துபாயில் நடைபெறவுள்ள யுகேசி கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் வீரர் யுவாஜ் சிங், இயான் மோர்கன், ஆன்ட்ரே ரஸல், கெவின் பீட்டர்ஸன் ஆகிய வீரர்களும் பங்கேற்கின்றனர்.