

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா.
டெல்லி-வங்காள ரஞ்சி போட்டியை அடுத்து பிடிஐ-யிடம் சஹா தெரிவிக்கும் போது, “தோனியின் சாதனைகளை பரிசீலிக்கும் போது, தோனியின் நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை, இன்னும் நிறைய ஆடினால்தான் எனக்கான ஒரு இடத்தை நான் தருவித்துக் கொள்ள முடியும். என்னைக் கேட்டால் தோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன்.
ஏன் இந்த வரையறை என்றால் தோனியின் சாதனைகள் அப்படிப்பட்டவை. அவர் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சில சாதனைகளை நிறைவேற்றியுள்ளார். முக்கியமான சில டெஸ்ட் இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார். நானும் இன்னும் நிறைய ஆட வேண்டும், அதாவது அவரது நிழலிலிருந்து நான் வெளிவர வேண்டுமென்றால் இன்னும் நிறைய ஆட வேண்டும்.
நான் நன்றாக ஆடினால் நான் அணியில் நீடிக்கப் போகிறேன், இல்லையேல் நமன் ஓஜா இருக்கிறார். எனக்கு எந்த விதமான மாயைகளும் இல்லை. நான் 2 வாய்ப்புகளைப் பெற்ற காரணம் நான் 2 அரைசதங்களை அடித்திருந்ததே. நான் சரியாக ஆடவில்லை என்றால் எனக்கு பதில் வேறொருவர் நிச்சயம் வருவார்.
ஆனால் என் வழியில் வரும் வாய்ப்புகளை நான் பற்றிக் கொண்டு முன்னேறவே விரும்புவேன். 6-ம் நிலையில் பேட் செய்வது எனக்கு சிரமம் அளிக்கவில்லை. 2-வது புதிய பந்தை எதிர்கொள்வதோடு, பின் வரிசை ஆட்டக்காரர்களுடன் கூட ஆடியுள்ளேன்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோர் இருப்பதால் கடனமே. கொல்கத்தாவில் இதற்காகவென்று சிறப்பு ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதே போல் பந்தை த்ரோ செய்து எழும்பி வரும் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்தேன். ஸ்டெய்ன், மோர்கெல் ஆகியோர சிறப்பாக எதிர்கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு கூறினார் சஹா.