7 ஆண்டுகளுக்குப் பின் 2-வது இன்னிங்ஸ்: சயத் முஸ்டாக் அலி கோப்பைக்கான கேரள அணியில் ஸ்ரீசாந்துக்கு இடம்
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக 7 ஆண்டுகள் தடையை அனுபவித்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
சயத் முஸ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் கேரள அணியில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார்.
2021-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி முதல் மும்பையில் நடக்கும் சயத் முஸ்டாக் அலி டி20போட்டியில் கேரள அணி விளையாட உள்ளது.
தொடக்கத்தில் உத்தேச அணியில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த் தற்போது மாநில அணிக்குள் வந்துள்ளார். 7 ஆண்டு தடை கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில், அதன்பின் ஸ்ரீசாந்த் பங்கேற்கும் முதல் உள்நாட்டுப் போட்டித் தொடர் இதுவாகும்.
கேரள கிரிக்கெட் வாரியத்தின் பிரசிடென்ட் டி20 கோப்பை நடத்தப்படுவதாக இருந்தது. ஒருவேளை நடந்திருந்தால் அதில் ஸ்ரீசாந்த் அறிமுகமாகியிருப்பார். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநில அரசு கிரிக்கெட் தொடருக்கு அனுமதி வழங்கவில்லை.
சயத் முஷ்டாக் அகில் கோப்பைக்கான கேரள அணிக்கு சஞ்சு சாம்ஸன் கேப்டனாகவும், துணைக் கேப்டனாக சச்சின் பேபியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரள அணியில், ஸ்ரீசாந்த், சாம்ஸன், சச்சின் பேபி, பாசில் தம்பி, ஜலஜ் சக்சேனா, ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத், சல்மான் நிஜார், நிதிஷேக், ஆசிப், அக்ஷய் சந்திரன், அபிஷேன் மோகன், வினூப், மனோகரன், முகமது அசாருதீன், ரோகன் குன்னும்மாள், மிதுன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வத்ஸல் கோவிந்த் சர்மா, ஸ்ரீரூப், மிதுன், ரோஜித் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
