Last Updated : 30 Dec, 2020 05:35 PM

 

Published : 30 Dec 2020 05:35 PM
Last Updated : 30 Dec 2020 05:35 PM

இந்தியர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்ததுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது: ரஹானே உருக்கமான நன்றி

இந்திய அணியின் கேப்டன் ரஹானே : படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

இந்தியர்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தியதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி, விருதாக நினைக்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரஹானே ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக மோசமாக 36 ரன்களில் சுருண்டது.

இது கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியது. ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும், வேதனையையும், கோபத்தையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்தனர்.

அதுமட்டுமல்லாமல், இந்திய அணி டெஸ்ட் தொடரில் 4-0 என்று தோல்வியுற்றுச் செல்லும் என சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிண்டல் செய்தார்கள். விடுப்பு எடுத்துச் சென்றுள்ள கோலியை மீண்டும் அழைக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

பந்துவீச்சில் முகமது ஷமி இல்லை, கோலி இல்லை, இசாந்த் சர்மா கிடையாது. இதுபோன்ற பலவீனமான அணி எவ்வாறு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெல்லப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், ரஹானேவின் அருமையான கேப்டன்ஷிப்பால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணியை 195 ரன்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். ரஹானேவின் அற்புதமான சதம் (112), ஜடேஜாவின் அரை சதம் ஆகியவற்றால், 326 ரன்களை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் குவித்தது.

2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் மிரட்டல் பந்துவீச்சில் 200 ரன்களில் ஆஸி. ஆட்டமிழந்தது. 70 ரன்கள் எனும் எளிய இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டி இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.

நேர்த்தியான ஃபீல்டிங் அமைப்பு, எதிரணியைக் குழப்பும் வகையில் பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியது என சாதுர்யமாகச் செயல்பட்ட ரஹானேவின் கேப்டன்ஷிப் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் ரஹானே பெற்றார்.

இந்நிலையில் தங்களுக்கு ஆதரவு அளித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ரஹானே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நாங்கள் பெற்றுக்கொண்ட ரசிகர்களின் அனைத்து அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன். ஒரு அணியாக எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி, விருது என்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்ததுதான். தொடர்ந்து உங்களின் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டும். அடுத்த இரு போட்டிகளிலும் நாங்கள் கடினமாக உழைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்டநாயகன் விருதைப் பெற்றுக்கொண்டு ரஹானே அளித்த பேட்டியில், “வீரர்கள் அனைவரையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். சிறப்பாக விளையாடினார்கள். அறிமுக வீரர்கள் சிராஜ், கில் இருவருக்கும்தான் ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட வேண்டும்.

ஆட்டநாயகன் விருதுக்கு நான் பொருத்தமானவர் அல்ல. அடிலெய்ட் தோல்விக்குப் பின், அதை வெளிக்காட்டாமல் வீரர்கள் தங்களுடைய குணத்தை வெளிப்படுத்தி விளையாடியதைப் பார்க்கவே பெருமையாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x