Last Updated : 30 Dec, 2020 03:16 AM

 

Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: முகமது அலியின் வாரிசு

குத்துச்சண்டை போட்டிகளில், அப்பாவுக்கு தான் ஒன்றும் குறைந்த வரில்லை என்பதை நிரூபித்த லைலா அலியின் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 30). குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய முகமது அலியின் மகள்தான் லைலா அலி. உலக சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பல போட்டிகளில் பட்டம் வென்றவரான லைலா அலி, தான் பங்கேற்ற 24 போட்டிகளில் ஒன்றில்கூட எதிராளியிடம் தோற்றதில்லை.

தான் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தாலும், தனது மகள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவதை ஒருபோதும் முகமது அலி விரும்பியதில்லை. சவால்கள் நிறைந்த அந்தத் துறைக்கு தனது மகள் லைலா பொருத்தமற்றவர் என்றுதான் முகமது அலி கருதியிருந்தார். முதல் போட்டியில் லைலா வென்ற பிறகுதான் இந்த கருத்தை முகமது அலி மாற்றிக்கொண்டார். இதுபற்றி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் லைலா அலி கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் என் அப்பாவுக்கு தெரியாமல் நான் ரகசியமாகத்தான் குத்துச் சண்டையை கற்று வந்தேன். சில நாட்களுக்கு பின் அவர் அதுபற்றி தெரிந்துகொண்டார். இருந்தாலும் எதுவும் சொல்லவில்லை.

ஆனால், நான் தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக திட்டமிடுவதைப் பற்றிக் கேள்விப்பட்டதும், அவர் கவலையானார். ‘குத்துச் சண்டை களத்தில் உன்னை யாராவது நாக் அவுட் செய்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அப்படி நாக் அவுட் செய்தாலும் உங்களைப் போல் மீண்டு வருவேன்’ என்று கூறினேன். இதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. 1999-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, என் முதல் குத்துச் சண்டை போட்டியில் நான் கலந்துகொண்ட போது, அப்போட்டியைக் காண அவர் வந்திருந்தார். நான் வெற்றி பெற்றதும், டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தவர், என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவரது பெருமிதத்தின் அளவை அந்த அணைப்பு உணர்த்தியது. இவ்வாறு லைலா அலி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x