

அபுதாபியில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்குத் திரும்பிய ஷோயப் மாலிக் தனது அதிகபட்ச ஸ்கோரான 245 ரன்களை எடுத்தார். 420 பந்துகளைச் சந்தித்த ஷோயப் மாலிக் 24 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 245 ரன்கள் விளாசினார். அவருடன் ஆசாத் ஷபிக் 107 ரன்கள் எடுத்தார்.
இருவரும் இணைந்து 248 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் களைப்படைந்தனர். நேற்று மொகமது ஹபீஸ் 98 ரன்களை எடுக்க மாலிக் 124 ரன்களுடனும், ஷபிக் 11 ரன்களுடனும் இருந்தனர். ஷபிக், ஹபீஸ் இருவருக்கும் இயன் பெல் கேட்ச்களை நழுவ விட்டார். யூனிஸ் கான் 38 ரன்களுக்கும் கேப்டன் மிஸ்பா 3 ரன்களுக்கும் வெளியேறினர்.
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சுக்கு விளாசல் பணி நடந்தது. அடில் ரஷீத் 34 ஓவர்களில் 164 ரன்களையும், மொயீன் அலி 30 ஓவர்களில் 121 ரன்களையும் விட்டுக் கொடுத்து இருவருமே விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை. டெஸ்ட் வரலாற்றில் முதல் போட்டியில் மோசமான பந்து வீச்சு என்ற எதிர்மறை சாதனைக்குச் சொந்தக்காரரானார் அடில் ரஷீத்.
மொத்தம் இவர்கள் இருவரும் 64 ஓவர்களில் 285 ரன்களை விட்டுக் கொடுத்தது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. மாறாக, ஆண்டர்சன், பிராட், பென் ஸ்டோக்ஸ், மார்க் உட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் 82.1 ஓவர்களில் 201 ரன்களையே விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் மொத்தம் 26 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் வர, வேகப்பந்து வீச்சில் 24 பவுண்டரிகள் 1 சிக்சர் வந்தது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்பிய ஷோயப் மாலிக். அதுவும் அசார் அலி உடல் தகுதி பெறாததால் அணிக்கு வந்தவர் மாலிக், தனக்குக் கிடைத்த வாய்ப்பை சற்றும் எதிர்பாராத வகையில் பயன்படுத்திக் கொண்டார்.
இங்கிலாந்து இன்றைய தினம் இன்னும் 8 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது. குக், மொயின் அலி ஆடி வருகின்றனர்.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.