Last Updated : 29 Dec, 2020 07:35 PM

 

Published : 29 Dec 2020 07:35 PM
Last Updated : 29 Dec 2020 07:35 PM

இந்திய வீரர்கள் பந்துவீச்சில் அவுட்டாகி விடுவோம் எனும் பயத்தை நிறுத்தங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன்களை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் : கோப்புப்படம்

மெல்போர்ன்

இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் முதலில் நிறுத்தினால்தான் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாடியுள்ளார்.

அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல் தோற்கடித்து இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த இரு போட்டிகளாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், ஸ்மித் ஆட்டம் படுமோசம். அதிலும் ஸ்மித் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 1,1,0,8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடந்த இரு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் சேர்த்த அதிகபட்சமே கேப்டன் பெய்ன் அடித்த 73 ரன்கள்தான்.

2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. எந்த வீரர்களின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தொடவில்லை.

இதுபோன்ற ஏராளமான சொதப்பல்களை பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர்கள் செய்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

''இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துவிடுவோம் எனும் பயத்தை நிறுத்தினால்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட் சரிவைத் தடுக்க முடியும். அடிலெய்டில் 191, மெல்போர்னில் 195, 200 ரன்கள் அடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியான ரன்களாக எனக்குத் தெரியவில்லை. பேட்டிங் நன்றாகச் செய்யவேண்டும் என்ற தீர்க்கமான எண்ணம் இல்லாமல் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இந்திய அணி வீரர்கள், பேட்டிங்கில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவுட் ஆவதைப் பார்த்து அவர்கள் கவலைப்படவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தாலும் ரன்களைச் சேர்த்தார்கள். ஓவருக்கு 2.5 ரன்களை வேகமாகச் சேர்த்தார்கள். ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் ரன் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வமே காணப்படவில்லை.

வீரர்கள் தேர்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுவினர் பல கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் தாங்கள் எவ்வாறு விளையாடினோம் என்பது குறித்து மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன்.

கடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமைப்படக்கூடிய வகையில் எந்த பார்ட்னர்ஷிப்பும் அமைக்கவில்லை. அடிலெய்டில் அணி மீது விழுந்த கீறல்கள், விரிசல்கள் பூசி மெழுகப்பட்டன. ஸ்மித் இன்னும் தனது இயல்பான ஆட்டத்துக்கு வரவில்லை.

வார்னர் அணியில் இல்லை, லாபுஷேன் எதிர்பார்த்த ஸ்கோர் செய்யவில்லை. இப்போதுள்ள சூழலில் வார்னர் அணிக்குத் திரும்ப வேண்டியது அவசியம். ஸ்மித் அதிகமான ரன்கள் அடிக்க வேண்டும். லாபுஷேன் தனது ஃபார்முக்கு வர வேண்டும்''.

இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x