ஒருநாள், டி20, இப்போ டெஸ்ட்: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகமாக வாய்ப்பு?

தமிழக வீரர் டி.நடராஜன்: கோப்புப் படம்.
தமிழக வீரர் டி.நடராஜன்: கோப்புப் படம்.
Updated on
2 min read

சிட்னியில் ஜனவரி மாதம் தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி.நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம், இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது. ஆனால், மனம் துவண்டுவிடாமல், மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது.

ஏற்கெனவே காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா தொடரிலிருந்து விலகினார். மனைவியின் பிரசவம் காரணமாக விடுப்பு எடுத்து கோலியும் சென்றுவிட்டார். கைமணிக்கட்டு எலும்பு முறிவால் முகமது ஷமியும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.

இந்தச் சூழலில் உமேஷ் யாதவுக்கும் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் காயம் பெரிதாக இல்லை என்றபோதிலும், இரு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், சிட்னியில் 2021, ஜனவரி 7-ம் தேதி நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது. உமேஷ் யாதவ் 3-வது டெஸ்ட் போட்டியில் இல்லாத நிலையில், தமிழக வீரர் டி.நடராஜன், நவ்தீப் ஷைனி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன் அணித் தேர்வுக் குழுவினரையும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியையும் கவர்ந்துள்ளார். ஆதலால், 3-வது டெஸ்ட் போட்டியில் நடராஜனை அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேனல் ஒன்றுக்கு பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “உமேஷ் யாதவ் காயத்தால் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடாவிட்டால், மாற்று வீரரைக் களமிறக்குவோம். நடராஜன் களமிறங்கவும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து அணி மேலாண்மையிடம் கேட்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால், உமேஷ் யாதவ் களமிறங்காத நிலையில், நடராஜன் 3-வது டெஸ்ட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை நவ்தீப் ஷைனியை விடவும், நடராஜன் மிகத் துல்லியமாகவும், ஆஸி. பேட்ஸ்மேன்கள் திணறும்வகையிலும் பந்துவீசி வருகிறார். கபில்தேவ், ஷேன் வார்ன், பிரட்லீ போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் நடராஜன் பந்துவீச்சைப் புகழ்ந்து, யார்க்கர் மன்னன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

பந்துவீச்சு வேகம் மட்டுமே ஷைனியிடம் இருக்கும். துல்லியம், ஸ்விங் செய்தல், பந்துவீச்சில் மாற்றம் செய்தல் போன்றவை குறைவுதான். ஆனால், நடராஜன் பந்துவீச்சில் ஓரளவு வேகம், எதிர்பாராத நேரத்தில் யார்க்கர், அவுட் ஸ்விங் என அருமையாகப் பந்து வீசுவதால், சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜன் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in