Last Updated : 29 Dec, 2020 01:58 PM

 

Published : 29 Dec 2020 01:58 PM
Last Updated : 29 Dec 2020 01:58 PM

50 ஆண்டுகளில் இந்தியா 3-வது அணி; ஆஸி. பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை; மெல்போர்னில் 4-வது வெற்றி; மலிங்காவுக்கு அடுத்து சிராஜ்: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் ரஹானே: படம் உதவி | ட்விட்டர்.

மெல்போர்ன்

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடந்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்து, அடுத்த போட்டியில் வென்று பதிலடி கொடுத்த 3-வது அணி எனும் பெருமையை இந்திய அணி பெற்றது.

கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாத நிலையில், மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி அணியை 195 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரஹானே சதத்தால், 326 ரன்கள் குவித்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு இன்று ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸி.க்கு பதிலடி கொடுத்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருக்கின்றன.

மெல்போர்ன் போட்டியில் நடந்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

4-வது வெற்றி

மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும். வெளிநாடுகளில் அதிகமான முறை இந்திய அணி வெற்றி பெற்ற மைதானங்களில் மெல்போர்ன்தான் அதிகம். அடுத்தாற்போல் மே.இ.தீவுகளில் டிரினிடாட்டில் இருக்கும் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்திலும், ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கிலும், கொழும்புவில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்திலும் இந்திய அணி 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

17 ஆண்டுகளில் முதல் முறை

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா (SENA) ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் டாஸில் தோல்வி அடைந்து இந்திய அணி முதலில் பந்துவீசி டெஸ்ட் போட்டியில் வெல்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும்.

கடைசியாக 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் டாஸில் தோற்று பந்துவீசி போட்டியில் வென்றது. இந்த சேனா நாடுகளைத் தவிர்த்து இலங்கை அணிக்கு எதிராக 2010-ல் டாஸில் தோல்வி அடைந்து முதலில் பந்துவீசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது.

50 ஆண்டுகளில் முதல் முறை

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸி. அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து, அடுத்த போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது கடந்த 50 ஆண்டுகளில் இரு முறை நடந்துள்ளது. கடந்த 1975-76ல் ஆஸி.க்கு எதிராக மே.இ.தீவுகள் அணி முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்து 2-வது டெஸ்ட்டில் வென்றது. அதேபோல 2011-ல் ஹோபர்டில் ஆஸி.க்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வென்றது. முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்று 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸி வென்றது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக முதல் டெஸ்ட்டில் 23 முறை இந்திய அணி தோற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் தோற்று 2-வது டெஸ்ட்டில் இந்தியா கடைசியாக வென்றது கடந்த 2010-11ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியாகும்.

ஆஸி. பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை

கடந்த 32 ஆண்டுகளில் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் எந்த ஆஸி. வீரரும் அரை சதம் அடிக்காமல் இருந்தது 32 ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் மே.இ.தீவுகளுக்கு எதிராக இதுபோல் ஆஸி. பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடிக்காமல் இருந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்று உள்நாட்டில் 3 முறை நடந்துள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய, ஆஸி அணிகள் மோதிய கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி. வீரர்கள் ஒருவர்கூட சதம் அடிக்கவில்லை. அதிகபட்ச ஆஸி. வீரர் ஸ்கோர் செய்தது 79 ரன்கள்தான். கடந்த ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சம். 2016-ல் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித், மேக்ஸ்வெல் இருவரும் சதம் அடித்திருந்தனர்.

மலிங்காவுக்கு அடுத்து சிராஜ்

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இலங்கை வீரர் லசித் மலிங்காவுக்கு அடுத்தாற்போல் இந்திய வீரர் முகமது சிராஜ் உள்ளார். மலிங்கா அறிமுகப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழத்தினார். சிராஜ் இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x