

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடை பெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 70-வது இடத்தில் இருப்பவரும், தகுதிச் சுற்று வீரருமான ஸ்பெயினின் ஆல்பர்ட் ரேமோஸ் வினோலஸ் 7-6 (4), 2-6, 6-3 என்ற செட் கணக் கில் ஃபெடரரை வீழ்த்தினார். தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒருவரை ஆல்பர்ட் ரேமோஸ் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஃபெடரர் 15 ஏஸ் சர்வீஸ்களை விளாசியதோடு, எதிராளியைவிட அதிகமான புள்ளிகளையும் பெற்றார். எனினும் முக்கியமான கட்டத்தில் ஃபெடரரின் ஆட்டத்தில் துல்லியம் இல்லாதது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.
மற்றொரு ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் 7-6 (5), 7-6 (2) என்ற நேர் செட்களில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியைத் தோற்கடித்தார்.
தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டாமி ஹேஸையும், பிரான்ஸின் ஜில்ஸ் சைமன் 6-3, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் தகுதிநிலை வீரரான ஜார்ஜியாவின் நிகோலஸ் பேசிலஸ்விளியையும் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.