

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திேரலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரன் அவுட் வழங்கிய டிஆர்எஸ் முறை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
டிஆர்எஸ் முறையில் அம்பயர்ஸ் கால் முறையை முழுமையாக மறு ஆய்வு செய்ய ஐசிசி முன்வர வேண்டும் என லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.
ரஹானாவுக்கு ஒரு நியாயம், ஆஸி. கேப்டன் டிம் பெய்னுக்கு ஒரு நியாயமா என நெட்டிசன்கள் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கும், இந்திய அணி 326 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதில் இந்திய அணி 3-வது நாள் ஆட்டமான இன்று, முதல் இன்னிங்ஸில் விளையாடியபோது, 100-வது ஓவரில் ரஹானே ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால், ரன் அவுட் குறித்த மூன்றாவது நடுவர் ஆய்வு செய்து அம்பயர்ஸ் கால் அளித்தார். இதையடுத்து கள நடுவர் ரன் அவுட் என்று அறிவித்தார்.
ஆனால், டிவி ரீப்ளேவில் ரஹானேவின் பேட் கிரீஸைத் தொட்டது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும், ரஹானேவுக்கு அவுட் வழங்கப்பட்டது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியபோது கேப்டன் பெய்னுக்கு ரன் அவுட் குறித்து மூன்றாவது நடுவருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, டிம்பெய்ன் தனது பேட் கிரீஸைத் தொட்டது உறுதி செய்யப்படாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்குத் தர வேண்டும் என்பதால், அவருக்கு அவுட் வழங்கவில்லை.
அதேபோன்ற சந்தேகத்தின் பலன் ரஹானேவுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஹானே ரன் அவுட் செய்யப்பட்டதையும், பெய்ன் ஆட்டமிழந்ததையும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"இது ஏமாற்றுத் தனம்" என்றும், "ஏமாற்றுத்தனம், பெய்னுக்கு பெய்ன் (வலி) ஏற்படவில்லை. ஆனால், ரஹானேவுக்குக் கொடுமையான முடிவு" என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர், லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ரஹானே அவுட் குறித்துக் கூறுகையில், “வீரர்கள் டிஆர்எஸ் முறையை எடுக்கும் விஷயத்தில் ஐசிசி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். சில முடிவுகளால் வீரர்கள் அதிருப்தி அடைகின்றனர். அம்பயர்ஸ் கால் குறித்து தெளிவான விதிமுறைகள் ஏதும் இல்லை.
சில நேரங்களில் பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்கப்படுவதில்லை. சில முக்கியமான தருணங்களில் அவுட் வழங்கப்படுகிறது. களத்தில் உள்ள நடுவர்கள் எடுக்கும் முடிவால் வீரர்கள் அதிருப்தி அடைவதால், டிஆர்எஸ் முறையை முழுமையாக ஆய்வு செய்யக் கூறுகிறோம். குறிப்பாக டிஆர்எஸ் முறையில் அம்பயர்ஸ் கால் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.