இந்திய அணிக்கு அடுத்த பின்னடைவு? உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறினார்: ஆஸி.க்கு அதிர்ச்சியளித்த அஸ்வின்

ஆஸி. வீரர் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்திய ஆர்ப்பரிப்பில் இந்திய வீரர் அஸ்வின்: படம் உதவி | ட்விட்டர்.
ஆஸி. வீரர் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்திய ஆர்ப்பரிப்பில் இந்திய வீரர் அஸ்வின்: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
1 min read

மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக வெளியேறினார்.

ஏற்கெனவே இந்திய அணி காயத்தால் இசாந்த் சர்மாவை இழந்துவிட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ள நிலையில் யாதவுக்கு ஏற்பட்ட காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்திய அணியில் வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் மட்டுமே பந்துவீசி வருகின்றனர்.

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே ஜோ பர்ன்ஸ் (4) விக்கெட்டை உமேஷ் யாதவ் பந்துவீச்சில் இழந்தது.

உமேஷ் யாதவ் 8-வது ஓவரை வீசியபோது, திடீரென அவரின் முழங்காலில் தடைப்பிடிப்பு ஏற்பட்டு மைதானத்தில் அமர்ந்தார். அவரால் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் மீதமிருந்த 3 பந்துகளையும் சிராஜ் வீசினார்.

அடுத்துவந்த லாபுஷேன், மேத்யு வேட் விளையாடினர். இதில் அஸ்வின் வீசிய 18-வது ஓவரில் பந்தை தடுத்து ஆட லாபுஷேன் முயன்றபோது, பேட்டின் நுனியில் பட்ட ஸ்லிப்பில் இருந்த ரஹானேவிடம் பந்து தஞ்சமடைந்தது. லாபுஷேன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி மிகப்பெரிய விக்கெட்டான லாபுஷேனை வீழ்த்தியுள்ளது.

ஸ்மித் 4 ரன்களிலும், மேத்யூ வேட் 20 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 23 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைவிட 75 ரன்கள் பின்தங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in