Last Updated : 28 Dec, 2020 09:08 AM

 

Published : 28 Dec 2020 09:08 AM
Last Updated : 28 Dec 2020 09:08 AM

ஐசிசி அறிவித்தது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணி; சிறந்த டி20 அணி அல்ல: பாக்.வீரர் ஒருவர்கூட இல்லை: ஷோயப் அக்தர் பாய்ச்சல்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் : கோப்புப்படம்

புதுடெல்லி


ஐசிசி அறித்த கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த டி20 அணியில் ஒருவர்கூட பாகிஸ்தான் வீரர் இல்லை. பாபர் ஆஸம் சிறந்த வீரர் அவரின் பெயரும் இல்லை. ஐசிசி அறிவித்தது சிறந்த டி20 அணி அல்ல, ஐபிஎல் அணி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் விளாசியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த டி20, ஒருநாள், டெஸ்ட் அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த 3 பிரிவுகளிலும் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இல்லை. அதேபோல மகளிருக்கான பிரிவிலும் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் கூட இல்லை.

ஒருநாள், டி20 அணிக்கும் தோனிதான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும், இந்திய வீரர்கள் பும்ரா, ரோஹித் சர்மா, அஸ்வின், தோனி, கோலி ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், ராவல்பின்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் ஷோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலில் ஷோயப் அக்தர் பேசியிருப்பதாவது:

பாகிஸ்தான் அணி ஐசிசியில்தான் இருக்கிறது, அவர்களும் டி20 போட்டி விளையாடுகிறார்கள் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறந்துவிட்டது என நான் நினைக்கிறேன். ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் ஆஸமை ஐசிசி சிறந்த டி20 அணியில் தேர்வு செய்யவில்லை. பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரு வீரரைக் கூட எந்த பிரிவுக்கும் ஐசிசி தேர்வு செய்யவில்லை.

எங்களுக்கு ஒன்றும் ஐசிசியின் கடந்த 10 ஆண்டு டி20 அணி தேவையி்ல்லை. ஐசிசி அறிவித்திருப்பது 10 ஆண்டுக்கான சிறந்த டி20 அணி அல்ல, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் ஒரு அணியைத்தான் அறிவித்துள்ளது.

ஐசிசி அமைப்பு முழுமையாக பணத்தை அடிப்படையாக வைத்தும், தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்ஸர்கள் வைத்துதான் செயல்பட்டு வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 பவர்ப்ளே, 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள். டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்ஸன், மே.இ.தீவுகளின் 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் எல்லாம் எங்கே போனார்கள். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் எங்கே சென்றார்கள். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள், லெக் ஸ்பின்னர்கள் எங்கு சென்றார்கள்.

அவர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள். ஏனென்றால் ஐசிசி கிரிக்கெட்டை வர்த்தகமயமாக்கி, பணம் சம்பாதிக்கும் பொருளாக மாற்றிவிட்டது. 10 கிரிக்கெட்லீக்குகளை அனுமதி்த்து பணம் சம்பாதிக்கிறது.

3ஆண்டுகளில் 2 உலகக் கோப்பைகள், லீக் ஆட்டங்கள் நடத்த வேண்டும் என ஐசிசி விரும்புகிறது. 1970-களில் இருந்த கிரிக்கெட்டுக்கும், இப்போது இருக்கும் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. சச்சினும் ஷோயப் அக்தரும் இல்லாவிட்டால், கிரிக்ெகட் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

பாபர் ஆஸமைவிட சிறந்த வீரர் டி20 போட்டியில் யாருமில்லை. பாகிஸ்தான் அணியிலேயே டி20 போட்டியில் அதிகமான ஸ்கோர் செய்த வீரர் பாபர் ஆஸம். எங்கள் நாட்டுக்கு பாபர் ஆஸம் செய்ததை விராட் கோலியுடன் ஒப்பிடலாம்.

இதுபோன்ற ஐசிசி அறிவிப்பு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் ஐசிசி உண்மையான கடந்த 10 ஆண்டுகளுக்கான டி20 அணியை அறிவிப்பார்கள், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணியை அறிவிக்கமாட்டார்கள்.

இவ்வாறு ஷோயப் அக்தர் தெரிவித்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x