326 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது: ஆஸி.க்கு சவாலான முன்னிலை; தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது

2-வது இன்னிங்ஸில் ஆஸி.வீரர் ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை உமேஷ் யாதவ் பகிர்ந்து கொண்ட காட்சி: படம் உதவி | ட்விட்டர்.
2-வது இன்னிங்ஸில் ஆஸி.வீரர் ஜோ பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை உமேஷ் யாதவ் பகிர்ந்து கொண்ட காட்சி: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இன்னும் இரண்டரை நாட்கள் இருக்கும் நிலையில், இந்த முன்னிலை ரன்களைக் கடந்து, இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியினர் இருக்கின்றனர்.

இந்திய அணிக்கு 131 ரன்கள் முன்னிலை என்பது ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு நல்ல வாய்ப்பாகும். இதைத் தக்கவைத்து விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கினால், ஆஸ்திரேலிய அணியைச் சுருட்டிவிடலாம்.

மெல்போர்ன் ஆடுகளம் அடுத்த 3 நாட்களுக்கு வறண்டு காணப்படும் என்பதால், சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைக்கும், பந்து பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும். இதனால் அடித்து ஆடவும் முடியும், பந்துவீச்சாளர்கள் பவுன்ஸர்களை அதிக அளவில் வீச முடியும். ஆதலால், அடுத்துவரும் நாட்கள் போட்டிக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

131 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. ஜோ பர்ன்ஸ் 4 ரன்னில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

போட்டியின் நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்திருந்தது. ரஹானே 104 ரன்களுடன் (12 பவுண்டரி) துணையாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இருவரும் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ரஹானே கூடுதலாக 8 ரன்கள் சேர்த்து 112 ரன்களுடன் இருந்தபோது, லாபுஷேனால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். ஜடேஜாவின் தேவையில்லா அழைப்பால் ரஹானே ஓடிச் சென்று ரன் அவுட் ஆனார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. ஜடேஜா மட்டும் ரஹானேவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்தால், ரன் அவுட் நடந்திருக்காது. இந்திய அணி தொடர்ந்து முன்னிலையோடு நகர்த்திருக்கும்.

இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த அஸ்வின், ஜடேஜாவுடன் சேர்ந்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய ஜடேஜா 132 பந்துகளில் தனது 15-வது அரை சதத்தை நிறைவு செய்தார்.

ரஹானே வெளியேறியபின் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களின் பவுன்ஸர் ஆயுதத்தை கையில் எடுத்தனர். ஜடேஜாவுக்குத் தொடர்ந்து பவுன்ஸர்களை வீசி ஸ்டார்க் , கம்மின்ஸ் வெறுப்பேற்றினர்.

பொறுமையிழந்த ஜடேஜா 57 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்டார்க் வீசிய பவுன்ஸரை தூக்கி அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த உமேஷ் யாதவ் (9) ரன்களில் நாதன் லேயான் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸ்வின் 14 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பும்ரா ரன் ஏதும் சேர்க்காமல் லேயானிடம் விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணி உணவு இடைவேளைக்குள்ளாக 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலையிலிருந்து நடந்த முதல் செஷனில் இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதிலும் 294 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்த இந்திய அணி கடைசி 32 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திேரலியத் தரப்பில் லேயான், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in