Last Updated : 29 Oct, 2015 01:43 PM

 

Published : 29 Oct 2015 01:43 PM
Last Updated : 29 Oct 2015 01:43 PM

ஆடுகளத் தன்மை விவகாரம்: மும்பை போட்டி சர்ச்சையில் திருப்பம்

தென் ஆப்பிரிக்கா இமாலய வெற்றி பெற்று தொடரை வென்ற மும்பை ஒருநாள் போட்டியின் பிட்ச் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிட்ச் தயாரிப்பாளர்களுக்கு எந்த வித அறிவுறுத்தலும் தரவில்லை என்று சுதிர் நாயக் உள்ளிட்டோர் தெரிவித்துள்ள சூழ்நிலையில், 5-வது ஒருநாள் போட்டிக்கு பந்துகள் மெதுவாக திரும்பும் சுழற்பந்து வீச்சு சாதக ஆட்டக்களம் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ-யின் மைதானம் மற்றும் ஆடுகள குழுவின் நம்பத்தகுந்த வட்டாரம் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு தெரிவிக்கும்போது, பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ பிட்ச் வடிவமைப்பாளர் ரமேஷ் மமுன்கருக்கு 'சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையக்கூடிய, மெதுவான ஆட்டக்களம்' அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது 5 போட்டிகளுக்குமே மெதுவான, சுழற்பந்து சாதக ஆட்டக்களம் கோரப்பட்டுள்ளது.

“வடக்கு மண்டல தலைவர் தல்ஜித் சிங் இது குறித்து அக்டோபர் 3-ம் தேதியே, அதாவது வான்கடே ஒருநாள் போட்டிக்கு 3 வாரங்கள் முன்னதாகவே, ரமேஷ் மமுன்கருக்கு இந்த விஷயம் அறிவுறுத்தப் பட்டது. மேலும் தல்ஜித் சிங், மமுன்கரிடம் பேசியும் உள்ளார்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் கொடுக்கப்பட்ட பிட்ச், மட்டையாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களம். இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா சாதனையான 438 ரன்களை விளாசியது.

சுதிர் நாயக் மீது ரவிசாஸ்திரியின் கலாய்ப்பு

'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு ரவி சாஸ்திரி கூறும்போது, மைதானம் மற்றும் பிட்ச் கமிட்டியின் வழிகாட்டுதல்களை மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகள் பின்பற்றவில்லை. "முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் நான் முதல்தளத்தில் நின்று கொண்டிருந்த போது, சுதிர் நாயக் கீழே வந்தார். நான் ‘நல்ல பிட்ச், நன்றாகச் செய்தீர்கள், வெல்டன்’ என்றேன்.

வெறுப்பின் உச்ச கட்டத்தில் இகழ்ச்சியாகக் கூறியதே தனது பாராட்டுரை போன்ற கேலிப் பேச்சு என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

பிட்ச் குறித்து இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுதிர் நாயக் இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு காட்டமாக எழுதிய கடிதத்தில், “யார் இந்த பாரத் அருண்? என்னுடைய உதவியாளரை திட்ட இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அவரது பணி இந்திய பவுலர்களுக்கு பயிற்சி அளிப்பதே. அவர் எங்கள் பணியில் குறுக்கிடுகிறார்” என்று சாடியுள்ளார்.

சுதிர் நாயக் தற்போது தெரிவிப்பது:

ஆட்டத்துக்கு 2 நாட்கள் முன்னதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதாவது இந்திய அணி சுழற்பந்துக்கு சாதகமான மெதுவான ஆட்டக்களம் கேட்கிறது என்று. பிட்ச் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு தண்ணீர் தெளித்தோம், புற்களை அகற்றினோம், அணி நிர்வாகம் ஆட்டத்துக்கு ஒருநாள் முன்பு குட் லெந்த் பகுதியில் தண்ணீர் தெளித்து பராமரிக்கக் கோரினர். ஆனால் பிட்ச் தயாரிப்பாளர்களாக இது சிறந்ததல்ல என்று கருதினோம், காரணம் பிட்ச் இரண்டு விதமாக தோற்றமளிக்கும். மேலும் பிசிசிஐ பிட்ச் தயாரிப்பாளர் திராஜ் பார்சனா தண்ணீர் தெளிக்க வேண்டாம் என்று கூறினர்.

இவ்வாறு கூறுகிறார் சுதிர் நாயக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x