

கேப்டனாகவும், வீரராகவும் தோனியின் இடத்தை தேர்வுக்குழுவினர் நெருக்கமாக பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்க்கர் கூறியுள்ளார்.
வெளிப்படையாக யாரும் பேசத் துணியாததை பேசத் துணிந்த அஜித் அகார்க்கர் ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் அளித்த பேட்டியில் இது பற்றி கூறியிருப்பதாவது:
"ஒரு கேப்டனாகவும், வீரராகவும் தோனி என்ன செய்கிறார் என்பதை அணித் தேர்வுக்குழுவினர் நெருக்கமாக பார்வையிட வேண்டும், அவர் இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர் அணியின் சுமையாக மாறுவது யாவருக்கும் விரும்பத் தகாதது. அவர் இன்னும் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அவரின் ஆண்டுக் கணக்கில் ஆடிவந்திருக்கலாம், அதற்காக அவர் தோல்விகளை நாம் சரி என்று ஆமோதிக்க முடியாது.
மேலும், ஒருநாள் போட்டிகளில் அவர் 4-ம் நிலையில் களமிறங்குவது பற்றி எனக்கு திருப்தி இல்லை. இப்போது அடுத்த உலகக் கோப்பைக்கு அணியை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகள் என்பது கொஞ்சம் அதிகமான காலம். ஆனால், தோனி, தனது கிரிக்கெட்டின் அந்திம காலத்தில் 4-ம் நிலையில் களமிறங்குவது எனக்கு திருப்தியளிக்கவில்லை. 3 மற்றும் 4-ம் நிலையில் விளையாடக்கூடிய பேட்ஸ்மென் இல்லையென்றால் பரவாயில்லை, ஆனால் நம்மிடம் அஜிங்கிய ரஹானே இருக்கிறார், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 4-ம் நிலைக்குக் கீழே இறங்கி ஆடுவார் என்று நான் நினைக்கவில்லை. அவரது ஆட்டமுறை மாறினாலே தவிர இதற்குச் சாத்தியம் மிகக் குறைவு.
முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடிய திறமையை தோனி இழந்துவிட்டார். அவர் நேரம் எடுத்துக் கொண்டுதான் ஆடுகிறார். வங்கதேசத்துக்கு எதிராக முன்னதாக களமிறங்கினார், ஆனாலும் இந்தியா தொடரை இழந்தது. தோனியின் அடித்து ஆடக்கூடிய திறமையை வைத்தே அவரை முன்னதாக களமிறங்க முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரே கூட தான் 6-ம் நிலையில் களமிறங்குவதன் தேவையை வலியுறுத்தியே வந்துள்ளார்.
5,6, மற்றும் 7-ம் நிலையில் இறங்கி ஆடுவது கடினமானது. யுவராஜும், தோனியும் நீண்ட காலம் இதனைச் செய்ததை நாம் பார்த்துள்ளோம். அதற்காக இப்போது போய் அவரை முன்னால் இறக்குவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ரெய்னா, தோனி, 5 மற்றும் 6-ம் நிலையில் களமிறங்குவதே சரி. தோனி அவரது கரியரின் இந்தத் தருணத்தில் 4-ம் நிலையில் களமிறங்க முடிவெடுக்கக் கூடாது.
ஒருநாள் போட்டிகளில் முடிவுகளைப் பார்க்கும் போது இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் நன்றாக ஆடி வருவது தெரிகிறது. ஆனால் உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றோம். அதன் பிறகு வங்கதேசத்தில் தோல்வி. இப்போது தோனி தலைமையில் டி20 தொடரும் இழக்கப்பட்டுள்ளது. புரிகிறது. டி20 போட்டிகளின் தன்மை அது விரைவில் போக்கை மாற்றக்கூடியது இதனால் இதை வைத்து ஒருவரை எடைபோடுவது கூடாதுதான், ஆனால் தோனிக்கு இது மிகப்பெரிய ஒரு தொடர்.
இந்திய அணி எதை நோக்கிச் செல்கிறது என்பதை தேர்வாளர்கள் முடிவெடுக்க வேண்டும், விராட் கோலி டெஸ்ட் அணியை நன்றாக தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன் தேர்வுக்குழுவினர் முக்கியமான முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்”
இவ்வாறு கூறியுள்ளார் அகார்க்கர்.