Published : 27 Dec 2020 04:14 PM
Last Updated : 27 Dec 2020 04:14 PM

ஐசிசி விருதுகள்: கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள், டி20 அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி தேர்வு: டெஸ்ட் அணிக்கு யார்?

எம்.எஸ். தோனி : கோப்புப்படம்

துபாய்

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20, ஒருநாள், டெஸ்ட் அணிக்கான வீரர்களுக்கு வாக்களிக்கும்படி ரசிகர்களிடம் ஐசிசி கேட்டிருந்தது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சர் கார்பீல்ட் சோபர்ஸ், ராச்சல் ஹேஹோ பிளின்ட் விருதுக்கும் வாக்களிக்கக் கோரப்பட்டிருந்தனர். ரசிகர்கள் அளித்த வாக்களிப்பின் அடிப்படையில் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.

சிறந்த டி20 அணி

இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல், தோனி, பொலார்ட், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை வீரர் லசித் மலிங்கா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் இருந்து ஒருவர் கூட சிறந்த டி20 அணியில் இடம் பெறவில்லை. இந்திய வீரர்கள் மட்டும் தோனி, ரோஹித் சர்மா, பும்ரா, கோலி என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 11 பேர் கொண்ட அணியில் 6 பெரிய ஹிட்டர்ஸ் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த ஒருநாள் அணிக்கும் தோனி கேப்டன்

கடந்த 10 ஆண்டுகளி்ல் சிறந்த ஒருநாள் அணிக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், இலங்கை வீரர் லசித் மலிங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் தோனி, ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை.

டெஸ்ட் அணிக்கு கோலி தலைமை

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணிக்கான கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் இந்திய அணி வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் அலிஸ்டார் குக், டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், விராட் கோலி, ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின், தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி சார்பில் வார்னர், ஸ்மித் இருவரும். இங்கிலாந்தில் இருந்து குக், ஸ்டோக்ஸ், ஆன்டர்ஸன், பிராட் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூஸிலாந்து தரப்பில் தலா ஒருவர் தேர்வாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x