எதிரணியை பயமுறுத்திய பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக்: பிரபலங்கள் வாழ்த்து

எதிரணியை பயமுறுத்திய பேட்ஸ்மேன் வீரேந்திர ஷேவாக்: பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் ஷேவாக் அடித்த 15 சதங்களில் 14 சதங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளன. ஷேவாக் முதல் சதத்தை 22 வயதில் 69 பந்துகளில் விளாசினார். 2002 சாம்பியன் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 126 விளாசல், ஹாமில்டனில் நியூசிக்கு எதிராக 125 ரன் குவிப்பு, 2011 உலககோப்பை தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 175 ரன் விளாசியது, 2011ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தது ஆகியவை ஷேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தன.

சஷாங்க் மனோகர்(பிசிசிஐ தலைவர்):

பல ஆண்டுகளாக ஆடிய நீங்கள் இளம் வீரர்களுக்கு உதாரணமாக இருந்துள்ளீர்கள். உங்களது அதிரடி ஆட்டத்தால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றிருக்கிறீர்கள். உலக கிரிக்கெட்டில் எதிரணியிணை பயமுறுத்தும் பேட்ஸ்மேனாக விளங்கிய உங்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

தோனி:

விவ் ரிச்சர்ட்ஸ் பேட் செய்தபோது நேரில் அதை பார்த்ததில்லை. ஆனால் சிறந்த பந்து வீச்சுகளையும் ஷேவாக் சிதற விட்டதை நேரில் பார்க்க முடிந்தது என்பதை பெருமையோடு நான் கூறிக்கொள்கிறேன்.

கங்குலி:

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த சாம்பியனாக ஷேவாக் விளங்கி னார். அவரை நாம் சிறப்பாக வழி அனுப்பி வைத்திருக்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர்:

தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தால் சேவாக் முத்திரை பதித்து சென்றுள்ளார். சொந்த உள்ளுணர்வின்படி விளையாடக்கூடியவர், அதேபோல் வாழ்க்கையிலும் இருப்பவர். நம்மை மகிழ்விக்கும் வகையில் மேலும் நிறைய விஷயங்களை சேவாக் செய்வார் என்று நம்புகிறேன்.

மறக்க முடியாதவை

$ 2004ல் பாகிஸ்தானுக்கு எதிரான முல்தான் டெஸ்டில் ஷேவாக் 309 ரன்கள் குவித்தார். இதனால் இந்தியா 1952-க்குப் பிறகு பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்த உதவியது.

$ 2003ல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 195 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சேர்த்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

$ 2009ல் இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்டில் 293 ரன்கள் விளாசினார். இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா ஐசிசி தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

$ 2008ல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக151 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடி போட்டியை டிரா ஆகச் செய்தார்.

$ 2008ல் காலேயில் இலங்கைக்கு எதிராக ஆட்டதில் 201 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அஜந்தா மெண்டீஸ் அபாரமாக பந்து வீசினார். இவரது பந்து வீச்சை கணிக்க முடியாமல் மற்ற வீரர்கள் திணறிய நிலையில் ஷேவாக் மட்டும் 70 ரன்கள் எடுத்தார்.

$ 2008ல் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4வது நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் 68 பந்துகளுக்கு 83 ரன்குவித்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in