Published : 14 Oct 2015 10:16 AM
Last Updated : 14 Oct 2015 10:16 AM

மேட்ச் பிக்ஸிங்கில் இந்திய வீரர் தினேஷ் மோங்கியாவுக்கு தொடர்பு: நியூஸி. வீரர் வின்சென்ட் பரபரப்பு வாக்குமூலம்

இந்திய கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) போட்டியின்போது இந்திய வீரர் தினேஷ் மோங்கியாவும் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் லோ வின்சென்ட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் கிரிக்கெட் உலகையே உலுக்கிய நிலையில், தற்போது தினேஷ் மோங்கியா மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு எழுந்திருப் பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உதய மாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஐசிஎல் போட்டிதான். 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இரண்டு சீசன்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்தத் தொடரின்போது சண்டிகர் லயன்ஸ் அணிக்காக கிறிஸ் கெய்ன்ஸ், லோ வின்சென்ட், தினேஷ் மோங்கியோ உள்ளிட்டோர் விளையாடினார்.

ஐசிஎல் தொடரின்போது மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாகவும், அதில் முன்னாள் நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் கெய்ன் ஸுக்கு தொடர்பிருப்பதாகவும் முன் னாள் ஐபிஎல் ஆணையரான லலித் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்த கெய்ன்ஸ், அவரிடம் இருந்து நஷ்ட ஈடு தொகையும் பெற்றார்.

அதன்பிறகு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதும், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்து, வழக்கை திசை திருப்பியதும் கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பான வழக்கு லண்டன் சவுத்வார்க் கிரவுன் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான லோ வின்சென்ட் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதா வது: கிறிஸ் கெய்ன்ஸின் நேரடி உத்தரவின்பேரிலேயே நான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டேன். கிறிஸ் கெய்ன்ஸை எனது ரோல் மாடலாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் திடீரென மேட்ச் பிக்ஸிங் உலகிற்கு நான் அழைக்கப்பட்டேன். அங்கு ஐசிஎல் தொடரைப் பற்றியும், ஒவ் வொரு போட்டியையும் எப்படி பிக்ஸ் செய்வது என்பதைப் பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது. வருண் காந்தி என்ற சூதாட்டத் தரகர் மூலம்தான் மேட்ச் பிக்ஸிங் பற்றி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அந்த பெண் எனக்கு பரிசாக அளிக்கப்படுகிறார் என்பதை அறிந்தபோதுதான் நான் சூதாட்ட வலையில் விழுந்ததை உணர்ந்தேன்.

ஆரம்பத்தில் இது தொடர்பாக எனது மேலாளரிடம் புகார் தெரிவித் தேன். ஆனாலும் கெய்ன்ஸின் தொடர் வறுபுறுத்தல் காரணமாக நான் சூதாட்டத்தில் ஈடுபட்டேன். நீங்கள் எனக்காகத்தான் வேலை செய்கிறீர்கள். சரியான விஷயத்தைத்தான் செய்கிறீர்கள் என கெய்ன்ஸ் என்னிடம் தெரிவித்தார். இப்படித்தான் மேட்ச் பிக்ஸிங் குறித்து எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய வீரர் தினேஷ் மோங்கியா, நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேரில் டஃப்பி ஆகியோரும் சண்டிகர் லயன்ஸ் அணிக்காக ஆடிய நேரத்தில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

லோ வின்சென்ட், மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியதால் வாழ்நாள் தடை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x