Published : 26 Dec 2020 12:02 PM
Last Updated : 26 Dec 2020 12:02 PM

2வது டெஸ்ட் போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு - 195 ரன்களுக்குச் சுருண்ட ஆஸி. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸ்திரேலியா. இந்திய அணிக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா என இரண்டு முக்கிய வீரர்களுமே இல்லாத நிலையில் அஜிங்ய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் முகமது சிராஜ், ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். மேலும் ரவீந்திர ஜடேஜாவுக்கும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸை இழந்திருந்த இந்திய கேப்டன் ரஹானே, வென்றிருந்தால் தாங்களும் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்திருப்போம் என்றார். எனவே ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆஸி. அணியின் துவக்க வீரர்கள் பர்ன்ஸ், வேட் என இருவரும் சம்பிரதயமான துவக்கத்தைக் கொடுத்தனர்.

4 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாவது ஓவரின் 2வது பந்தில் பும்ரா, பர்ன்ஸ் விக்கெட்டுடன் தனது கணக்கைத் தொடங்கினார். 11வது ஓவரிலேயே பந்துவீச அழைக்கப்பட்ட அஷ்வின், தனது இரண்டாவது ஓவரில் மாத்யூ வேடை (30 ரன்கள்) ஆட்டமிழக்கச்செய்தார். மேலும் தனது அடுத்த ஓவரில் ஸ்டீவன் ஸ்மித்தை வெளியேற்றி, முதல் பாதியிலேயே ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுப்பாடுக்குக் கொண்டு வந்தார்.

உணவு இடைவேளியின் போது 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்திருந்தது. லபூஷனே மற்றும் ட்ராவிஸ் ஹெட் களத்தில் இருந்தனர். இடைவேளை முடிந்து முதல் ஓவரை, அறிமுக வீரர் முகமது சிராஜ் வீசினார். களத்தில் இருந்த இரு பேட்ஸ்மேன்களுமே நிதனாமாக, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர், மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்தது. குறிப்பாக லபூஷனே சிறப்பாக ஆடினார். இவரும் ஹெட்டும் சேர்ந்து பார்ட்னர்ஷிப்பில் 86 ரன்களைச் சேர்த்தனர்.

ஸ்கோர் 124 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது ஹெட் (38 ரன்கள்), பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இந்த கட்டத்திலிருந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிய ஆரம்பித்தன. லபூஷனே (48 ரன்கள்), கேமரூன் க்ரீன் (12 ரன்கள்) என இரண்டு பேரையும் சிராஜ் வெளியேற்றினார். அஷ்வின் பந்தில் டிம் பெய்ன் (13 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

மொத்தம் 72.3 ஓவர்கள் 195 ரன்களுக்கு ஆஸி. அணி அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரர் மயன்க் அகர்வால் விக்கெட்டை, ஸ்டார்க்கின் வேகத்தில் இழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x