

சேவாக்கின் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கும்போது மன தைரியமே அவரது மிகப்பெரிய பலம் என்று தெரிகிறது, என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் மாடர்ன் மாஸ்டர்ஸ் வீடியோ தொடரில் சஞ்சய் மஞ்சுரேக்கரும் திராவிடும் சேவாக் பற்றி மேலும் விவாதித்தனர்:
சேவாக் தனது ஃபார்மில் ஏற்றங்களையும், தாழ்வுகளையும் கொண்டிருந்தாலும் அவர் தனது பாணி ஆட்டத்தை மாற்றிக் கொள்ளமாட்டார். அவர் மாறவேமாட்டார். இதனை தொடர்ந்து செயல்படுத்த ஒருவிதமான மனதைரியம் வேண்டும். என்று கூறினார் திராவிட்.
சஞ்சய் மஞ்சுரேக்கர், ஒரு குறுகிய கால நினைவிழப்பு சேவாகுக்கு ஏற்படும் போல் தெரிகிறது. ஏனெனில் ஒரே ஓவரில் 3 பந்துகள் அவரது மட்டையக் கடந்து செல்லும் பீட் ஆவார். ஆனால் அதை உடனே மறந்து அடுத்த 3 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டுவார் என்றார்.
இதுபற்றி திராவிட் கூறுகையில், அவர் ஆடும் விதம் அதுதான், அது அவரது ஆளுமையின் ஒரு பகுதி, விளையாடும்போது மட்டுமல்ல அவுட் ஆகிவிட்டு வரும்போது ஓய்வறையில் பேட், கிளவுஸ் அனைத்தையும் கழற்றி விட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் ஜோக் அடித்துக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பி விடுவார். அவுட் ஆனது சிறிது நேரத்திற்கு அவருக்கு வருத்தமளிக்கவே செய்திருக்கும். ஆனால் அவர் அதனை பெரிது படுத்தமாட்டார் இதுதான் விருவின் ஆளுமை.
சில வேளைகளில் ஒரு ஆட்டத்தை டிரா செய்ய வேண்டிய நிலையில் கூட அவர் பந்தை தூக்கி அடித்து அவுட் ஆகிவிடுவார் என்று சஞ்சய் கூறியதற்கு திராவிட் பதிலளிக்கையில், டிராவுக்காக வேறு மாதிரி ஆடுவதினால் ஒன்றும் பயனில்லை என்று அவர் கருதியிருக்கலாம் ஆனால் அணியில் மற்ற வீரர்களுக்கு, பயிற்சியாளர்களுக்கு அவர் இவ்வாறு அவுட் ஆவது வெறுப்பை அளிக்கும், ஆனால் அவருடன் இது பற்றி பேச முடியாது, அவரை அவர் பாணியில் விட்டுவிட வேண்டியதுதான் இதில் அவர் வெற்றி அடைந்தால் பிரமாதம் அவ்வளவே.
இதுபற்றி ஒருவரும் அவரிடம் கேட்டதில்லை. ஆனால் கடைசியாக அயல்நாட்டுத் தொடர்களில் அவர் சரியாக ஆடாத போது அவரிடமிருந்து ரன்கள் வராதபோது இந்தக் கேள்வி எழுந்தது. டெஸ்ட் அணியிலிருந்து அவர் நீக்கபட்டார். இது மிகவும் வருத்தமளிக்கக் கூடியது.
அவர் ஒரு விதத்தில் தான் ஸ்கோர் செய்யாதது பற்றி உள்ளுக்குள் வருந்தினாலும் வெளியே அதனை சீரியசாகக் கருதமாட்டார்.
ஆனால் அவர் அதற்காகத் தன் பேட்டிங்கை பரிசீலனை செய்யாதவர் என்று கூற முடியாது, வலைப்பயிற்சியில் அவர் ஆலோசனைகளைப் பெறுவார். முக்கால்வாசி நேரம் அவரது ஆட்ட வீடியோக்களைப் பார்த்து வீடியோ ஆய்வாளர் அறையில் தனது உத்தி குறித்து ஆலோசனை செய்வார். அடிக்கடி அவர் வீடியோ ஆய்வாளர் அறைக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அவர் பாணியில் ஆடுவதற்கும் அதற்கேயுரிய பொறுமை வேண்டும், அதனால்தான் அவரால் பெரிய சதங்களை எடுக்க முடிகிறது இதுதான் விரு-வின் சாதனை.
என்று கூறினார் திராவிட்.