

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியைத் தோற்கடித்தது.
சொந்த ஊரான கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் தோற்றது நார்த் ஈஸ்ட் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 12-வது நிமிடத்தில் கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றது நார்த் ஈஸ்ட். வலது புறத்தில் சுஞ்சு கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரான்ஸிஸ் டேட்ஸி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார்.
இதைத்தொடர்ந்து 28-வது நிமிடத்தில் கோவா வீரர் ஜோப்ரே கொடுத்த கிராஸில் லூக்கா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது. இதனால் உத்வேகம் பெற்ற கோவா அபாரமாக ஆட ஆரம்பித்தது.
முதல் பாதி ஆட்டத்தில் 2-1
தொடர்ந்து 30-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது கோவா. ஜோப்ரே கொடுத்த கிராஸில் ரெய்னால்டோ இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் லியோ மவுரா கொடுத்த கிராஸில் மந்தார் தேசாய் கோலடிக்க, கோவா 3-1 என முன்னிலை பெற்றது.
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் கோவா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் தரப்பில் மூன்று பேரும், கோவா தரப்பில் 2 பேரும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப் பட்டனர்.
இன்றைய ஆட்டம்: மும்பை-சென்னை
இடம்: நவி மும்பை நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.